பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

57


வாறு” என்று தொடங்கும் பதிகத்தைப் பல்காலும் பயில்வதன் மூலம் நோய் நீங்கி வாழலாம். உடற் காய்ச்சலால் ஊனுடல் வருந்துவோர் "மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் பதிகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு பாங்குற ஓதினால் உய்தி பெறலாம். போகங்கள் பல பெற்றுத் துய்க்க வேண்டுமா? "பத்தூர் புக்கு இரந்துண்டு" என்று தொடங்கும் என்னும் பதிகத்தை நெஞ்சில் நினைந்துருகி ஒதிப்போகங்கள் பல பெற்றுத் துய்க்கலாம். பெரிய புராணம் திருமுறைகளுக்கு விளக்கம் காணவே எழுந்ததென்று சொன்னால் மிகையன்று.

பெரியபுராணத்தில் இலக்கிய இன்பம்

சேக்கிழார், தவத்திற் சிறந்த தவஞான முனிவர்களின் வரலாற்றைப் பாடினாலும் சிறந்த இலக்கிய இன்பம் பொதுளவும் பாடியுள்ளார். சிறு திகழ்ச்சிகளில் கூட மிக ஆழ்ந்த சமயத் தத்துவங்களை இனிய எளிய உவமைகளில் சேக்கிழார் விளக்கும் ஆற்றல் அவருக்கே உரியது. இளையான் குடிமாற நாயனார், சிவனடியார்க்கு அமுது செய்விக்க - கறி சமைக்கக் கொல்லைப் புறத்திற் சென்று கீரைதான் பிடுங்குகின்றார். இஃதொரு சாதாரணமான நிகழ்ச்சி. ஆயினும், சேக்கிழாரின் திருவருளில் தோய்ந்த சிந்தை இந்த நிகழ்ச்சியை அடியிற் கண்டவாறு பாடுகிறது. -

“குழிநிரம் பாதபுன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”.


இந்த வரிகளில் மண்டிக் கிடக்கும் தத்துவச் செறிவும் இலக்கிய இன்பமும் கற்று இன்புறத்தக்கது. சேக்கிழார், இளையான்குடி மாறனாரின் பாச நீக்க நிகழ்ச்சிக்கு உவமையாகச் சொல்வதால் அதற்கேற்றவாறு சொற்களைப் பெய்கிறார். "குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர்” என்றார்.