பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

61


 அப்பரடிகள் காலத்தில், திருக்கோயிலில் திருவலகிடுதல் ஒப்பற்ற திருத்தொண்டாக இருந்தது. அப்பரடிகளே உழவாரத்தொண்டு செய்திருக்கிறார். ஏன்? தில்லைநகரில் திருவருட் சுற்றுத் திருவீதியையே தூய்மை செய்திருக்கிறார். இன்று திருக்கோயிலில் திருவலகு திருத்தொண்டாகச் செய்வோரை ஒரு தடவையேனும் உங்களால் பார்க்க முடியுமா? அவர்கள் அகநலமும் புறநலமும் கெட்டுத் திருவலகுப் பணியைத் தொண்டாகச் செய்யாமல் வயிற்றுப் பிழைப்பாகச் செய்து வருகிறார்கள். அநேகமாக இதே நிலையில்தான் மற்றைத் தொண்டுகளும் இருக்கின்றன. அடியார்களுக்குப்பிறகு, அவர்கள் செய்த தொண்டினை நாம் வழிவழிச் செய்யத் தவறிவிட்டோம். அந்தத் தொண்டின் நெறி ஒல்லும் வகையாலெல்லாம் உயிர்ப்பிக்கப் பெற வேண்டும். அடியார்கள் செய்த தொண்டினைச் செய்கின்ற இயக்கங்கள் பெருகி வளர வேண்டும். அந்த அடியார்களிலும் பலர், மனித உருவில் நடமாடியவர்களுக்குத்தான் தொண்டு செய்தார்கள். பின்பு தான் மனித உருவிலேயே கடவுள் வந்து அதை ஏற்றுக் கொண்டார். மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களிலும் எளியவர்களுக்கே தொண்டு செய்தனர். சேக்கிழாரடிகளின் பெரியபுராணத்தில் அடியார்களோடு உறவு கொள்ளச் சிவபெருமான் எழுந்தருளிய போதெல்லாம் பெரும்பாலும் மனித உருவில் வந்ததைத்தான் பாடுகின்றார். மனித உருவிலும் எளிய உருவமே படைத்துக் காட்டினார். இன்று எளியோருக்குச் சமய அமைப்பில் ஏற்ற இடமில்லை. அஃது உயர் சாதியினர் - உயர்செல்வத்தினரோடு "கூட்டுப் பேரம்” நடத்துகிறது; அல்லது கூட்டுத்தொழில் நடத்துகிறது! இவையெல்லாம் பெரிய புராணத்தைப் போற்றும் முறையல்ல. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டவேண்டும்; பத்திமையால் பலகாலும் கும்பிட வேண்டும். அதுவே பெரியபுராணத்தைப் போற்றும் முறை அல்லது சேக்கிழாரை வழிபடும் முறை.