பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாயன்மார்கள் காட்டும் வழி

69


புராணம். அரசியல் வரலாற்றையும் சமுதாய வரலாற்றையும் நாம் அதில் காண முடிகிறது. மனித வாழ்வின் எல்லாத் துறைகளையும் அலசி ஆராய்ந்து செய்திகளை வெளியிட்ட வாழ்வு நூல் பெரிய புராணம். பெருமான், அர்ச்சனை பூசைகளை ஏற்றுக் கொண்டிருப்பவர் அல்லர். அவர் அடியார்க்கு வேலையாளானவர்-துதுவரானவர். இரவோடு இரவாகத் தன் தோழனுக்காக ஒரு பெண்ணிடம் தூது சென்றிருக்கிறார். இத்தகைய செய்திகள் பெரிய புராணம் வாழ்க்கையை ஒட்டியது - வாழ்வோடு பிணைந்தது என்பதைக் காட்டி நிற்கின்றன.

மனித இனத்தை வறுமையினின்றும் மீட்டு ஈடிலா இன்ப வாழ்வு வாழ வழிகாட்ட வேண்டுமென்ற ஒப்பில்லா உயர்ந்த எண்ணத்தைப் பெரிய புராணம் தருகின்றது. "வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாம் சிறுமை தப்பி” என்கின்றது சித்தியார். வறுமை வாழ்வைச் சிதைத்து மாற்றம் செய்கின்றது. வறுமையால் வரும் சிறுமையை விலக்க வேண்டும். மன்றுளார் அடியார் வரலாறான பெரிய புராணம் உணர்ச்சி, குரோதம், ஆத்திரம் போன்றவைகளை விலக்கிவிட்டுப் படிக்கவேண்டிய ஒரு தெய்வ நூல். செழுமை யான நிலத்தில்தான் பயிர் நன்றாகச் செழித்து வளரும்; உள்ளத்தின் செழுமையில்தான் உண்மைத் தத்துவங்களின் வளர்ச்சி தங்கிக் கிடக்கின்றது.

மன்றுளார் அடியார் பொதுமக்களுக்கு உரியவர்கள்; பொதுவாழ்வைப் பற்றிச் சிந்தித்தவர்கள்; எப்பொழுதும் எம்பெருமானை எண்ணியபடி எவர்க்கும் இன்னல் களைபவர்கள்; மன்றத்துக்கு மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவே தாங்கள் பிறந்திருப்பதாக எண்ணிச் செயல் பட்டவர்கள். இறைவனின் திருவடிகளே செல்வம் என்றெண்ணி வாழ்ந்தவர்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினால் அவர்கள் நன்மையையும் தீமையையும் ஒன்றாகவே-ஒரேதன்மை உடையனவாகவே கருதினார்கள்;