பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தெய்வம் என விளம்பவில்லை; மங்கையர்க்கரசியையே கூறி யுள்ளார். இவ்வாறாக மன்றுளார் அடியார் பெருமையினைப் பெரியபுராணம் பேசுகிறது. அன்று சமணர்கள் செயலைச் சம்பந்தர் தடுத்திராது போனால் இன்று நாமெல்லாருமே கையில் கமண்டலம் ஏந்துபவர்களாய் இருந்திருப்போம். நமது நாகரிகத்தைக் காப்பாற்றிய நல்லவர்களை நமது குலதெய்வங்களாக நாம் போற்றவேண்டும்.

வேதம், ஆகமம் போன்றவற்றை ஆராய இப்பொழுது அவகாசம் இல்லை. காலவெள்ளம் ஒடுகிற ஒட்டத்தைப் பார்க்கிறபொழுது, நிம்மதியுடன் இருந்து நீண்டநேரம் அவற்றை ஆராய முடியவில்லை. ஆதலால் நம் நாயன்மார்கள் காட்டும் வழிச்சென்று சிறப்புறுவோம்.

அன்பினாலே அம்மையப்பனை அணுகி அணைத்துக் கொள்வோம். கண்ணப்பர் கூட மோகமாய் ஒடிச் சென்று தழுவி மோந்துகொண்டார். சாக்கிய நாயனார் எறிந்த கல்லைக்கூட இறைவன் ஏற்று அருள் புரிந்தார். திருப்பனந் தாளிலே தடாகைப் பிராட்டியார் கொண்டு சென்ற மாலையை இறைவன் குனிந்து ஏற்றுக்கொண்டார். குங்கு லியக்கலயநாயனார் குங்குலியத் துரடம் போட்டார். இவைகளிலிருந்து அன்பின் நெகிழ்ச்சியே ஆண்டவனுக்கு வேண்டப்படுகிறது என்பதை உணரமுடிகிறது. வழிபாட்டிற்குச் சாதி தடையாய் இருக்கக் கூடாது. பசித்தவன் சோறு பெற்றுப் பசி நீங்கி மகிழ்ச்சி நிறைவு கொள்ளவேண்டும். அதுபோலவே கோவிலுக்கு வருகிறவர்களும் அருள் வெள்ளத்தைப் பருகி, ஆன்மதாகம் நீங்கி நிறைவுபெற வேண்டும். அதற்கு மொழிச் சுவரோ, இனச்சுவரோ, சாதிச் சுவரோ தடையாயிருக்கக்கூடாது. அப்பர் சுவாமிகள் கூட "போதோடு நீர் சுமந்தேந்திப் புகுவார்; அவர்பின் புகுவேன்" என்கின்றார். அங்கு சாதி, குலம், பிறப்பு என்னும் சழக்குகளை அறுத்தெறிந்து ஆண்டவன் சந்நிதான்த்தில் எல்லாரும் சமம் என்ற உணர்வினை உண்டாக்கவேண்டும்.