பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தரர் பெருமை

77


நண்பன் தேவை. எல்லா நண்பர்களிடத்தும் மனம் விட்டுப் பேசுதல் என்பது முடியாத காரியம். சிலர் புறத்தால்-முகத் தால் நண்பர்களாகவும், அகத்தால் பகைவர்களாகவுமே இருப்பார்கள். எவருக்கும் உயிர்க்குயிராக ஒரு நண்பன்தான்் இருப்பான். இந்த விதிக்கு விலக்காக ஒருசிலர் இருக்கலாம்; ஆனால் எல்லாரும் இருக்க இயலாது; இருக்கவும். முடியாது. வாழ்க்கை அனுபவத்தில் உண்டாகும் அந்தரங்கங்களையும் அவலங்களையும் மனம்விட்டு உயிர்த்தோழனிடம் நாம் சொல்லுவது போலவே, சுந்தரர் இறைவனைத் தன் உயிர்த் தோழனாக்கித் தன் இன்னல்களை மனம்விட்டுச் சொன்னார்.

தோழமைக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிக சக்தி உண்டு. மேடையில் நின்று அவையைப் பார்த்து, அன்பர்களே! பெரியோர்களே! என்றோ சகோதர சகோதரிகளே! என்றோ, சீமான்களே! செல்வர்களே! என்றோ விளித்தால் அவ்வளவு வரவேற்புக் கிடைப்பதில்லை. தோழர்களே! என்றவுடன் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஆரவாரத்தையும் கையொலியையும் காணமுடிகிறது. இத்தகைய சக்திவாய்ந்த தோழமை சுந்தரர் காலத்திலேயே, அதுவும் ஆண்டவனிடத்திலேயே உண்டாகிய தொன்றாகும்.

சுந்தரர் உள்ளத்தால் ஞானி; உடலால் உலகியலார். சுந்தரரின் வாழ்க்கை நகைச்சுவை நிரம்பியது. இரண்டு மனைவியரை மணந்தார். ஆற்றில் போட்டுக் குளத்தில் எடுத்தார். கலப்புத் திருமணம் செய்து சமுதாய வேறுபாடுகளை ஒழித்தார். ஒருவனிடத்தில் மட்டுமே கடன்பட்டார். அதுவும் தன் தோழனான ஆண்டவனிடத்திலேயே தேவைகளை வேண்டிப் பெற்றார். இப்படிப் பலப்பல உண்டு.

"தம்பிரான் தோழன்" என்ற பெருமையும் பெருநலமும் எய்திச் சைவப் பெருமக்கள் வாழவழிகண்டார் சுந்தரர். மாழை ஒண்கண் பரவையாரைத் திருவாரூரில் மணந்தார்.