பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


மங்கையர்க்கரசியார்

தமிழகம் வரலாற்றுப் புகழுடைய நாடாக விளங்கியது. தமிழகம் மொழி, கலை, இலக்கியம், சமயம் ஆகிய துறைகளில் செழித்து, வளர்ந்து விளங்கியது. தமிழகத்தை மூன்று பேரரசுகள் ஆண்டு வந்தன. அவை முறையே சேர, சோழ, பாண்டிய அரசுகள் என்ப. இந்தப் பேரரசுகளுக்கிடையில் சிற்றரசுகளும் இருந்து வந்தன. பொதுவாகப் பழந் தமிழகத்தின் வரலாறு சிறப்புடைய ஒன்றேயாம். தமிழக அரசுகள் மக்களின் தாய்மொழியாகிய தமிழை வளர்த்தன; கலை முதலியனவற்றையும் வளர்த்துப் பெருமைப்படுத்தின; சமயத்துறையில் நிறைந்த ஆர்வம் காட்டின; விண்ணளந்து காட்டி வினை மறைக்கும் எண்ணற்ற திருக்கோயில்கள் கண்டன; கல்லெல்லாம் கலையாக்கிப் பேசும் பொற்சித்திர மாக்கி இறைமையாக்கி அருள் நலம் காத்தன. திருக்கோயில்களைச் சமுதாய மையமாகக் கொண்டு மக்கள் நலப்பணிகளும் நடைபெற்று வந்தன.

கல்வி கற்பிக்கும் அமைப்புகளாகவும், கல்விபயில் கூடங்களாகவும், உடற்பிணி நீக்கும் மருத்துவச் சாலைகளாகவும் நீதி வழங்கும் முறை மன்றங்களாகவும், அற்றார்க்கு உதவும் அற நிலையங்களாகவும் தமிழகத் திருக்கோயில்கள் விளங்கின.