பக்கம்:குமாரி செல்வா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8


ஒரு மாதிரியாக அவர் கணக்கெடுப்பை முடித்ததும் 'உம். எவ்வளவு? என்று கேட்டாள் அவள்.

'21½ அங்குலம்’ என்று மென்று விழுங்கினார் அவர். 'பத்திரிகையிலே பிசகாக......'

'பிசகென்றால் லேசானதா! உடுக்கிடைப் பெண்ணை தடி இடைக் குந்தாணியாக மாற்றி விட்டீர்களே!’

'மண்ணிக்கணும். அறியாமலே நேர்ந்த தவறு. உரிய முறையில் திருத்தம் எழுதி விடுகிறேன்’ என்றார் பரமசிவம்.

'திருத்தத்திற்குத் திருத்தம் வேறு எழுதும்படி யாக புதுத் தவறு செய்து வைக்காதீர்கள்' என்று கூறிக் கலீரெனச் சிரித்தாள் குமாரி. 'ஞாபகமிருக் கட்டும் ஸார்! நான் வாறேன்!'என்று சொல்லுதிர்த்து விட்டு குதித்தோடி மறைந்தாள்.

'அட கடவுளே! அட நவயுகமே! அட நானே !’ என்று வியந்தவாறு நாற்காலியில் சாய்ந்தார் ஆசிரியர். இது கதையா, கனவா. கழுத்தறுப்பா என்று நினைத் தார். 'உண்மை. நிஜமாய் நடந்ததுதான்...உலகம் ரொம்ப வேகமாகத்தான் முன்னேறுகிறது!’ என முனங்கினார்.

'குமாரி செல்வா அருமையான பெண். அழகு அழகு அநியாய அழகு! அதைவிட அநியாயமான துணிச்சல். ரொம்ப துணிந்த குட்டி!’ என்று புலம்பியபடி அட்டைச் சித்திரத்திலே கண் பதித்தார் ஆசிரியர்.

'புதுமையின் குமிழ்; தீவிரத்தின் முகை; துணிச் சலின் சுடர்' என்று வியந்து கொண்டிருந்தது மனம். 'நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது கூடப் புதுமையான திடீர் நிகழ்ச்சிதானே!’ என்ற எண்ணம் எழுந்தது உள்ளத்தின் உற்சாகம் சிரிப்பாக ஜோடி கூடியது. தானாகவே சிரித்தார் பரமசிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/10&oldid=1315610" இலிருந்து மீள்விக்கப்பட்டது