பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 103”

பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே"

- தேவாரம்

'முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக்கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு...' என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்ட போது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடிய வில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமல்ா, ஒதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டு விட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி. .

அன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக் கொண்டே புது வீடு பார்த்து விட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக் குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத் தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல் தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில் தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது, அங்கே சிரிப்பு இல்லை, சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்சி இருந்தது. -

தன்னுடைய எந்தத் துன்பங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதென்று அவள் நினைத்தாளோ அவை தெரிந்து விட்டன; அவளுடைய வீட்டில் பசியும், ஏழை மையும், பரிவும், வேதனையும் நிறைந்திருப்பதை உலகம் தெரிந்து கொண்டுவிட்டது; உலகம் என்றால் என்ன? கமலம் தெரிந்து கொண்டு விட்டாள். இந்த அநுதாபத்தைத்தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம்! நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே! மிகவும் நெருங்கிப் பழகிய சிநேகிதி செய்கிறாள். அந்த உதவியை வாய் கூசாமல் மறுத்து விட்டு வீட்டுக்குள் அடைந்து பட்டினி கிடக்க அவளுக்கு ஏது உரிமை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/105&oldid=555829" இலிருந்து மீள்விக்கப்பட்டது