பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 107

தேவியாரின் ஒவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப் பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணிய மெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்திலிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி.

'உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா, அம்மா? - இந்தக் கேள்வி, தன்னை நோக்கிக் கேட்கப்பட்டதும் பூரணி சாரதாமணி தேவியாரின் படம் அளித்த சிந்தனைத் தூய்மைகளிலிருந்து கீழிறங்கிக் கேள்வி கேட்ட அம்மாளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துப் பதில் கூறினாள். -

'ஆகவில்லை."

"அப்படியா வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?" -

இந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளை யெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும், வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது? அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னாள் பூரணி. இடை இடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக் கொண்டும் பதில் சொன்னாள். எல்லா வற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக தமிழிலும் ஆங்கிலத்திலு மாக ஒரு பி. ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது? கல்லூரிகளில் படிக்கும் பெண்கள்கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே இவளால் சமாளிக்க முடியுமா?' என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது.

"பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்

களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/109&oldid=555833" இலிருந்து மீள்விக்கப்பட்டது