பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

அறிவுப் புயலாய் வீசி மறைந்த அவ்வையார் எங்கே? தொண்டும், சமயமும் வளர்த்து ஞானச்செல்வியராய்ச் சுற்றித் திரிந்து புகழ் சுமந்த குண்டலகேசி எங்கே? மணிமேகலை எங்கே? கற்புக்கனல் எழுப்பிப் புகழ் சோதியாய் நிலைத்த கண்ணகி எங்கே? நரையாத குழலும், திரையாத முகமும், குறையாத நிறைவும் கொண்டு வரையாத சித்திரம் போல் அழகுடன் கன்னியாகவே வாழ்ந்து நிறைவு கண்ட திலகவதி எங்கே? கணவனே வணங்கும் பெண் தெய்வமாய் உயர்ந்த காரைக்கால் அம்மை எங்கே?

தமிழ்ப் பெண்குலம் என்ற வளமான நிலம் வரண்டு விட்டதா? புண்ணிய வித்துகள் மறுபடியும் அதில் பரவி முளைத்துக் கிளைத்து முகிழ்த்துச் செழித்து வளர்வது எப்போது? திரு.வி.க கண்ட பெண்ணின் பெருமை எங்கே? அவளுடைய புகழார்ந்த பரம்பரை எங்கே?

அடுத்து வரும் புதிய தலைமுறையினருக்கு எழுத வேண்டிய புதிய சரித்திரத்தில் எந்தத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி எழுதுவது? எப்படி எழுதுவது? எதை எழுதுவது?

தமிழ் நாட்டின் பொதுவாழ்வில் இன்று மலிந்து வரும் குறைகளையும் குழப்பங்களையும் நீக்கி ஒளிபரப்புவதற்குத் தாய்க்குலத்திலிருந்து மறுபடியும் ஒரு ஞானச் சுடர் தேவை. தொட்டதையெல்லாம் விளங்கச் செய்யும் பொலிவு வாய்ந்தது தமிழ்ப் பெண்மரபு. அந்த மரபிலிருந்து இந்த நாட்டு வாழ்க்கை யையே மாற்றியமைக்கும் பண்பு வாய்ந்த இலட்சியப் பெண்கள் பிறக்க வேண்டும்!

அப்படி ஓர் இலட்சியப் பெண் இதை எழுதுகிறவனுடைய கனவில் பிறந்தாள். கற்பனையில் தோன்றி 'என்னைக் காவிய மாக்குங்கள் என்றாள். இந்தக் கதையிலும் அவள் பிறக்கிறாள்; இனி நாட்டிலும் பிறப்பாள். பிறக்க வேண்டும் என்பது இந்தக் கதையை எழுதுகிறவனுடைய ஆசை!

வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/12&oldid=1234339" இலிருந்து மீள்விக்கப்பட்டது