பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறிஞ்சி மலர்



1

மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்
                                                             மெல்லப் போனதுவே!

பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜப்பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவி இருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம்போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப்பருவத்து இளம்காலை நேரம், கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.

பூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர் வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம் போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப் போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது , பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.

அப்படி ஒரு கோலத்தை இன்னும் ஒர் ஆண்டுக் காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/13&oldid=1234340" இலிருந்து மீள்விக்கப்பட்டது