பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 133

நெருங்கி, 'இதோ இன்னும் ஓர் அநாதைக் குழந்தை பாக்கி இருக்கிறது! ஏதாவது கொடுத்து விட்டுப் போகக்கூடாதா? கொஞ்சம் திருப்பித் தான் பாருங்களேன்' என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாகச் சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். நீங்களா அநாதைக் குழந்தை! உங்களுக்குத்தான் என்னையே கொடுத்து விட்டேனே? என்று பதில் சொல்ல நினைத்தான் அரவிந்தன்.

ஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத் தானே நினைத்துப் பார்த்தாள். புது மண்டபத்துப் புத்தக வியாபாரி உட்படப் பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில் தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன்! தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ?

மெல்ல நகருவது போலத் தோன்றினாலும் காலம் வேகமாகத்தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஒய்வு இருந்தது; அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளி யானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார்.

வேனிலைக் கழிப்பதற்காக மங்களேஸ்வரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள்.

'அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்கவேண்டும். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/135&oldid=555859" இலிருந்து மீள்விக்கப்பட்டது