பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 137

காசுக்குக்கூடத் தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்குப் பஸ் செலவு ஆயிற்று எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிர்வாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செல்வ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைப்பிடிக்கலானாள். பல வேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை இலட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த லட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது. திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாகியிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்லை அவள் குறைவிலும் நிறைவாக இருக்கிற இரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான்.

அன்றைக்கு வெள்ளிக் கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லோரும் கலந்து கொண்டு சொற்பொழி வைக் கேட்கலாம். பூரணி அன்று திலகவதியார் சரித்திரம் பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம் பற்றிக் கதைகதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார், அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும் போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்த போது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்ற போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/139&oldid=555863" இலிருந்து மீள்விக்கப்பட்டது