பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 139

களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்துத் தந்தை வந்து சொல்கிறார்: ;

'திலகவதி சோழ நாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கி விட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்.'

திலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய் தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக கனவெல்லாம் இன்பமாக, மன அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டுக் களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப்போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிக்கைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்தப் பெற்றோர் இறந்த துயரம் கூட மறைந்திருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்திவந்தது, சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர் மூச்சுக் காற்றையே விட்டு விட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ? - அக்கா நான் இருக்கிறேனே! எனக்காக வாழுங்கள் என்று கெஞ்சினான் தம்பி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டை போல் விதியின் கைகளில் அறைப்பட்டாள் திலகவதி. அந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/141&oldid=555865" இலிருந்து மீள்விக்கப்பட்டது