பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4() குறிஞ்சிமலர்

இந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கைதோய்ப்பதுபோல் மங்களேஸ்வரி அம்மாளின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்;

'திலகவதிக்கும், கலிப்பகை யாருக்கும் மணம்தானே பேசினார்கள்? அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக்கூடாது?"

'நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும் போதே அவனுக்கு வாழ்க்கைப் பட்டு விடுவார்கள், இந்த நாட்டுப் பெண்கள். அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடு கிறது'-என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பல பேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிற தென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்து விட்டீர்களே அக்கா என்று மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்த போது, "காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கறாங்க, உங்களைக் கூப்பிடுகிறாங்க" என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது.

'இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிர்வாகிகளின் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்து கொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பிரமை எழுந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/142&oldid=555866" இலிருந்து மீள்விக்கப்பட்டது