பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

"எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட முன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப் பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய் என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!”

உடல் ஒய்ந்து நோயில் படுத்து விட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி ஒடுங்கி முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டு கொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. அவன் ஊரில் இல்லை என்று தம்பி அச்சகத்துக்குப்போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது.

அரவிந்தன் எங்கே போயிருக்கலாம்? எங்கே போனால் என்ன? போகும் போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய் விட்டது? அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா? ஐயோ! அன்றைக்குக் கோவிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப் பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன்? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதுபோல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின்தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறு மனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒரு போதும் தயாராயில்லை.

அச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். 'புதிய அச்சு இயந்திரங்கள் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/157&oldid=555881" இலிருந்து மீள்விக்கப்பட்டது