பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 60 குறிஞ்சிமலர் 'இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக் கொண்டு அலமாரிக் கதவைச் சாத்திய போது 'உள்ளே வரலாமா? என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள்.

அரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய்க் கதறியிருப்பாள். அன்று கோவிலில் அவனிடம் அப்படி நடந்து கொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோவிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் வாருங்கள் என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பிரயாண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பி யிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக்கத்தி நுனி போல் கூராக இருக்குமே, அது போல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன்.

'உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது, இப்போது? நான் ஊருக்குப் போவதற்கு முதல் நாள் உன்னைக் கோவிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத் தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய் விட்டாய்..." என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத் தொடங்கிய போது, பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்து கொள்கிற முறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/162&oldid=555886" இலிருந்து மீள்விக்கப்பட்டது