பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 . குறிஞ்சிமலர்

பாலோர் வசிக்கும் இடம். கைகளில் உழைப்பும், மனத்திலும் வீட்டிலும் ஏழைமையுமாக வாழும் அந்தத் தொழில் உலகத்தில் முருகானந்தம் ஒரு பிரமுகர் போல் மதிப்புப் பெற்றிருந்தான். இத்தனை சிறு வயதில் அவ்வளவு பெருமை வருவதற்குக் காரணம் அவன் மற்றவர்களோடு பழகுகிற எளிய முறைதான். கூசாமல் எங்கே துன்பத்தைக் கண்டாலும் புகுந்து உதவுகிற மனம், எந்த இடத்திலும் யாருக்கு அநியாயம் இழைக்கப் பட்டாலும் தனக்கே இழைக்கப்பட்டதுபோல் உணர்ந்து குமுறிக்கொதிக்கிற பண்பு. சுற்றித் திரிந்து பல இடங்களில் அலைந்து பலரோடு பழகும் இயல்பு, இவற்றால் முருகானந்தம் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியில் அப்படி ஒரு செல் வாக்கைப் பெற்றிருந்தான். வெளியில் இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்த அவன் அரவிந்தனிடம் பழகிய விதமே தனிப்பட்டது. கருத்துக்களையும் இலட்சியங்களையும் கற்கும்போது ஆசிரி யனுக்கு முன் பணிவான மாணவனைப்போல் அவன் பழகினான். நண்பனாகப் பழகும்போது தோளில் கைபோட்டுக் கொண்டு உரிமையோடு பழகினான். உதவி செய்ய வருகிறபோது வேலைக்காரனைப்போல் கூப்பிட்டவுடன் வந்து உதவினான். ஆனால் அரவிந்தனுக்கும் முருகானந்தத்துக்கும் உள்ள வேறுபாடு இலட்சியங்களைச் செயல்படுத்துகிற விதத்தில் இருந்தது. ஒழுங்கையும் மனத்திடத்தையும் கொண்டு இலட்சியங்களை நிறைவேற்ற ஆசைப்பட்டான் அரவிந்தன். முரட்டுத் தனத்தையும் உடல் வன்மையையும் கொண்டு இலட்சியங்களை உருவாக்க ஆசைப்பட்டான் முருகானந்தம். அதற்கேற்ற உடல்கட்டும் அவனுக்கு இருந்தது.

அரவிந்தனுக்கு அச்சுப் பிரதிகள் படித்துத் திருத்துவதற்கு உதவும் நாட்களில் இரவில் நீண்ட நேரம்வரை கண்விழிக்க வேண்டியிருக்குமாகையால் முருகானந்தம் அவனோடு அச்சகத்திலேயே படுத்துக்கொண்டு விடுவான். வேலை முடிந்து படுத்துக்கொண்ட பிறகும் படுக்கையில் கிடந்தவாறே பல செய்திகளைப் பற்றிப் பேசிவிட்டுக் கண்கள் சோர்ந்த பின்பே அவர்கள் உறங்குவார்கள். அன்றைக்கோ அவர்கள் உள்ளே போய் உட்கார்ந்து வேலையைத் தொடங்கும்போதே ஏறக்குறைய இரவு பத்து மணியாகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் திரைப்படத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/172&oldid=555895" இலிருந்து மீள்விக்கப்பட்டது