பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 குறிஞ்சிமலர்

எழுதுங்கள். எது எழுதினாலும் தயவுசெய்து கார்டில் எழுதவேண்டாம். நான் உங்களைச் சந்திக்கிறேன்.

தங்கள், வசந்தா

கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தான் அரவிந்தன். 'நாலு எழுத்து படித்து விவரம் தெரிந்த பெண்களுக்கு இன்று இருக்கிற சினிமாப் பித்துக்கு அளவே இல்லை. ஒவ்வோர் இளம் பெண்ணும் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது தன்னை ஒரு நடிகையாக, அல்லது நடிகையைப் போல் நினைத்துக் கொண்டுதான் பார்க்கிறாள். அந்தக் கலையில் சேர்ந்தவர்களின் நடிப்பைப் பார்த்து ரசிப்பதோடு திருப்தி யடையலாம். ஆனால் எல்லோரும் கவர்ச்சி நிறைந்த அந்தக் கலைப்பள்ளத்தில் கண்ணை மூடிக் கொண்டு குதித்துவிடத் துடிக்கிறார்களே! இந்த மோகம் கன்றிய வெறிக்கு மருந்தை எங்கே தேடுவது?"

'மருந்தை அப்புறம் தேடலாம் முதலில் அந்த ஆளைத் தேடிக் கைக்கு விலங்குமாட்டி உள்ளே தள்ளவேண்டும். எல்லாம் புத்திசாலித்தனமாகச் செய்த பயல், இந்த மணிபர்ஸ்ஸை மட்டும் என் கடையில் மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டான். நேற்று நான் கடை பூட்டுமுன் தற்செயலாக இதைப் பிரித்துப் பார்த்தபோது இந்தப் படம் கண்ணில் பட்டது. அது நினைவிருந்ததனால் தான் நீ கொடுத்த படத்தைப் பார்த்த அளவில் கண்டுபிடித்தேன்' - என்று முருகானந்தம் கூறியதைக் கேட்டு, "அது சரி, தம்பி படத்தையும் மணிபர்ஸையும் வைத்துக் கொண்டு ஆளை எப்படி நீ கண்டுபிடிப்பாய் கடிதம் உறையின்றி இருக்கிறதே? முகவரியும் எழுதப்பெறவில்லையே' என்று சந்தேகத்தை வெளியிட்டான் அரவிந்தன்.

'பயல் இன்னும் நாலைந்து மாதங்களாவது நான் தைத்துக் கொடுத்த உடையைப் போட்டுக் கொண்டு தானே திரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கிறது நம்மிடம்; கண்டு பிடித்து விடலாம் பயப்படாதே" என்று முருகானந்தம் அரவிந்த னுக்குச் சொல்லிக் கொண்டிருந்த போது பூரணி உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு தந்தி உறை இருந்தது. உறையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/194&oldid=555917" இலிருந்து மீள்விக்கப்பட்டது