பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 குறிஞ்சிமலர்

பழக்கங்களால் இப்படி ஆகிவிட்டானே என்று நினைக்கும் போது துயரமும் கவலையும் கொண்டான். அச்சகத்தின் பின்பக்க வழியாக நெருப்பு வைக்கும் தீயநினைவோடு வந்துபோன ஆளை எண்ணிய போது பொறாமையின் சிறுமையை எண்ணி வேதனை கொண்டான். தாயைக் கதிகலங்கச் செய்து விட்டுப் பணத்தோடு ஒடிப்போன மங்களேஸ்வரி அம்மாளின் பெண்ணைப் பற்றி எண்ணியபோது அனுதாபமும் இரக்கமும் உற்றான். குழப்பமான மனநிலையோடு அறையிலிருந்தவாறே வெளியே நோக்கின அவன் கண்கள் எதிரே சன்னலுக்கு நேர் கிழக்கே பூமியைப் பிளந்து கொண்டு மேலெழுந்து நிற்கும் சத்தியம் போல் கோபுரம் விடியற்காலை வானத்தின் பின்னணியில் அற்புதமாய் தெரிந்தது. கூடலழகப் பெருமாள் கோவிலுக்கு வைகை நதியிலிருந்து திருமஞ்ஞன நீர் சுமந்து செல்லும் யானையின் மணியோசை காலைப்போதின் அமைதிகவிந்த வீதியெல்லாம் நிறைத்துக் கொண்டு ஒலிப்பது போல் அழகாக ஒரு பிரமை. எதிர்ப் பக்கம் ஒரு வீட்டு மாடியிலிருந்து சங்கீதம் பழகும் இளம் பெண் ஒருத்தி உலகத்தின் இன்பமயமான செளந்தரிய சக்திகளையெல்லாம் தட்டி எழுப்புவது போல் வீணையையும் தன் குரலையும் இனிமைக்கெல்லாம் இனிமையான ஒரு பேருணர்வில் குழைத்து உதயராகம் பாடிக்கொண்டிருந்தாள். குழாயடியில் குடங்கள் மோதும் விகாரமான ஓசையும் வாய்கள் மோதும் வசைமொழி களுமாக இது மண்ணுலகம் தான் என்று நினைவுபடுத்துகிறார் போல் ஓர் அடையாளம். அற்புதமான இந்த வைகறைச் சூழ்நிலையில் மலர்வதற்குத் துடிக்கிற அரும்புகள் போல் அவன் மனத்தில் சில நினைவின் அரும்புகள் முறுக்குநெகிழ்ந்தன. சட்டைப் பையிலிருந்து எப்போதும் தன்னிடம் இருக்கும் அந்தச் சிறிய திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் பிரித்தான். அந்தச் சமயத்தில் தன் மனத்தில் அரும்பியிருந்த சிந்தனைகளுக்கு ஏற்ற சில குறட்பாக்களைத் தேடிப் படித்து அவற்றின் உணர்வில் ஆழ்ந்தான். இந்த மாதிரி மனநிலை அடிக்கடி உண்டாகும் அவனுக்கு. சித்தப்பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருப்பான். சில வேதனை நிறைந்த சிந்தனைகளின் போது கண்கள் கலங்கி விடுவதும் உண்டு. இப்படிப்பட்ட உருக்கமான மனநிலை முற்றும்போது அவன் மன விளிம்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/198&oldid=555921" இலிருந்து மீள்விக்கப்பட்டது