பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 203

அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான்.

சார் இந்தப் பையன் விஷயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழியவில்லை. நான் இவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்' என்று அரவிந்தன் பேச ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் அவநம்பிக்கை தோன்ற நகைத்தார். அவருடைய தலைக்கு மேலே சிலுவையில் அறைந்த கோலத்தில் ஏசுநாதரின் அழகுருவம் கண்களில் கருணையும், உடம்பில் இரத்தமும் ஒழுகிடக் காட்சி தந்தது. அரவிந்தனின் பார்வை அந்தப் புண்ணிய மூர்த்தியின் படத்தில் பதிந்தது. தலைமை யாசிரியர் அவனுக்கு மறுமொழி கூறலானார்:

'இந்தப் பையனைப் பற்றிச் சொல்வதற்கு இனிமேல் என்ன இருக்கிறது? ஒழுக்கத்தையும் நல்ல நடத்தையையும் உன்னிப்பாக ஒவ்வொரு வினாடியும் கவனிக்கும் இங்கேயே வழிகெட்டுப் போய்விட்ட பையனை இனி என்ன செய்வது? பள்ளி இறுதி யாண்டுத் தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி எழுதும் ஒரு மாணவன் குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது பள்ளிக்கூடம் வந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதில் கால்வாசி நாட்கள் கூட இந்தப் பையன் பள்ளிக்கு வரவில்லை. ஆகவே இனிமேல் இவன் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வந்தாலும் அரசாங்கப் பரீட்சை இந்தத் தடவை எழுத முடியாது. அப்படி முடியாதிருக்கிறபோது iணுக்குச் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு இங்கு வருவது அநாவசியம். மறுபடியும் புதிதாக அவனை அடுத்த ஆண்டில் இங்கே சேர்த்தாலே போதும்."

சார் நீங்கள் அப்படிச் சொல்லி விடக்கூடாது. இந்தப் பையன் பெரிய தமிழ்க் குடும்பத்துப்பிள்ளை. பழக்கக்கேடுகளால் இப்படி ஆகிவிட்டான். இனி ஒரு போதும் கெட்ட வழியில் போகாமல் கவனித்துக்கொள்கிறோம். எப்படியாவது இந்தத் தடவை...' என்று அரவிந்தன் குழைந்து வேண்டிக் கொண்டதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/205&oldid=555928" இலிருந்து மீள்விக்கப்பட்டது