பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 209

உங்கள் பெண் மாறிவிடலாம் என்று நினைக்கிறேன். தயங்காமல் விரைவில் திருமணம் செய்து விடுங்கள். அவளை ஒழுங்காக்கு வதற்கு அதுவே சரியான வழி. அடுத்தாற் போல் உங்கள் இளைய பெண் செல்லத்தைப்பற்றி இப்படிப் பயப்படவேண்டாம். அந்தப் பெண் வழி தவறமாட்டாள் என்பதை இன்றைக்கே இந்த வயதிலேயே அவளைப் பார்த்துப் புரிந்துகொண்டு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்னால்' என்றாள் பூரணி.

"நீ சொல்வது நியாயமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் திருமணம் என்பது நினைத்தவுடன் முடிகிற காரியமா? நல்ல இடமாகப் பார்த்து ஒப்படைக்க வேண்டுமே என்று ஏக்கத்தோடு கூறினாள், மங்களேஸ்வரி அம்மாள். அந்த அம்மாளின் தோற்றத்தில் இப்போது பழைய ஒளி இல்லை. மனக் கவலைகளாலும், அவமானத்தாலும் குன்றிப் போயிருந்தாள். வீடு, வாசல், கார், செல்வம், செல்வாக்கு என்ன இருந்தாலும் மன நிம்மதியில்லாமல் கலகலப்பாக இருக்க முடியாதென்பது அந்த அம்மாளுடைய நிலையிலிருந்து பூரணிக்கும் புரிந்தது. அந்தப் பெண் வசந்தாவும் பழைய திமிர், கலகலப்பு எல்லாம் மாறிப் புதுப்பிறவி போல் மாடியறையில் அடைந்து கிடந்தாள். கல்லூரிக்குப் போவது நின்று போய்விட்டது. செழிப்பும் மங்களமுமாக இருந்த அந்த வீடு அந்தக் குடும்பம் நல்ல இருட்டில் விளக்கும் அணைந்த மாதிரி மங்கியிருந்தது. தினசரி மாலையில் மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் ஒரு நடை அந்த அம்மாள் வீட்டுக்குப் போய் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள் பூரணி.

மனிதர்களுடைய நாவுக்குக் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான். உப்பு, புளிப்பு, போன்ற அறுசுவைகளை விடத் தனக்கு அதிகம் விருப்பமான ஏழாவது சுவை ஒன்றை மனிதனாகவே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அது தான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை. மங்கையர் கழகத்தில் சிலரிடம் இந்தச் சுவைக்கு வரவேற்பு அதிகம். பூரணியிடம் ஒரு நாள், வகுப்புக்கள் முடிந்தவுடன் சில பெண்கள் மங்களேஸ்வரி அம்மாளின் மூத்த பெண்ணைப்பற்றி ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே கேட்டார்கள். மூடி மறைத்து இரகசியமாக்கிவிட முயன்றிருந்தும், அந்தப் பெண் எங்கோ ஒடிப்போய் விட்டு

கு.ம - 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/211&oldid=555934" இலிருந்து மீள்விக்கப்பட்டது