பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 குறிஞ்சிமலர் வந்தாள் என்று ஒருவிதமாகக் கை கால் முளைத்துப் பரவி விட்டிருந்தது செய்தி. விசாரித்தவர்கள் பூரணியிடம் படிக்கிறவர் களானாலும் அவளுக்குச் சம வயதுடையவர்களும், அதிக வயதுடையவர்கள் சிலருமாகக் கண்டிப்புக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அவள் அவர்களுக்குக் கடுமையாகவே மறுமொழி கூறினாள்:

“இங்கே எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத் தான் சம்பளம் தருகிறார்கள். வம்பு சொல்லிக் கொடுப்பதற்கு அல்ல; தயவுசெய்து பாட சம்பந்தமான சந்தேகங்களை மட்டும் என்னிடம் கேளுங்கள்.'

கேட்டவர்கள் வாய்கள் அடைத்தன. அவளைவிட மூத்த வர்கள், அவளைவிடச் செல்வத்தால் உயர்ந்தவர்கள் அவளிலும் சிறந்த அழகிய தோற்றத்தையுடையவர்கள் எல்லோரும் அங்கே, இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மனம் வைத்தால் அவளுடைய வேலைக்குச் சீட்டுக் கிழித்து வெளியேகூட அனுப்ப லாம். ஆனால் அத்தகைய இழிவான நினைவு அவர்கள் மனத்தில் கூடத் தோன்ற முடியாதபடி பூரணியின் தோற்றத்தில் ஏதோ ஒரு புனிதமான கம்பீரம் இருந்தது. அந்த முகம், அந்தக் கண்கள், அந்த அற்புதமான சொற்பொழிவு இவைகளால் அவள் தன்னை அவர்கள் மனத்தில் பதித்துக் கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் ஒரு மாதிரி இருந்த மங்கையர் கழக நிர்வாகிகள் கூட இப்போது அவள் ஞானம் கனிந்த நாவன்மைக்கும், தூய தோற்றத்துக்கும் முன் தவறாக நினைப்பதற்கே கூசினர். ஆனால் அவளுக்கு இத்தனை பெருமையும் கிடைப்பதற்குப் பாடுபட்ட மங்களேஸ் வரி அம்மாளின் வீட்டு நிலை நேர்மாறாக மாறியிருந்தது. வெளியே தலை காட்டுவதற்கே கூசி வெட்கப்பட்டாள் அந்த அம்மாள். குடிப்பெருமை என்பது நல்ல பால் வெண்கலத்தில் வார்த்த மணியைப் போன்றது. அதில் எங்கேயாவது ஒரு மூலையில் கீறல் விழுந்தாலும் ஒலி கெட்டுவிடுகிறதே - என்று தனக்குள் எண்ணி வருந்தினாள் பூரணி.

சிறிது காலமாக அவள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகவும் ஒழுங்குள்ளதாகவும் கட்டுப்பாட்டோடு செயலாற்றிக் கொள்ளப் பயன்படுத்தினாள். மங்களேஸ்வரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/212&oldid=555935" இலிருந்து மீள்விக்கப்பட்டது