பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 213

'ஏன், இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா?"

'உன்னிடமிருந்து நாங்கள் இதைவிடப் பெரிய உதவியை எதிர்பார்க்கிறோம். முருகானந்தத்தைக் கேள், சொல்வான்.

பூரணி விவரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் முருகானந்தத்தின் முகத்தைப் பார்த்தாள்.

"அக்கா! எங்களுடைய திட்டத்துக்கு நீங்கள் இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இங்கே வந்திருக்கிறோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியிலிருந்து ஒரு மணிவரை ஒரு தியேட்டர் வாடகைக்குப் பேசியிருக்கிறோம். பத்து, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று ரூபாய் விகிதத்தில் கட்டணம் போட்டு டிக்கட் விற்க ஏற்பாடாகியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விரிவானதொரு பொருள் பற்றி நீங்கள் சொற் பொழிவு செய்ய வேண்டும் அக்கா."

'நீங்கள் எல்லோரும் விளையாடுகிறீர்களா என்ன? இதென்ன நாடகமா? சினிமாவா? அல்லது பாட்டுக் கச்சேரியா? சொற்பொழிவுக்கு எங்காவது வசூல் கிடைக்குமா தியேட்டர் வாடகைக்குக் கூட வசூலாகாமல் கையைப் பிடிக்கப் போகிறது. இந்த வீண் யோசனையை விட்டு விட்டு வேறு காரியம் பாருங்கள்' என்று அவர்களைக் கடிந்து கொண்டாள் பூரணி.

'உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது அக்கா. வசூல் கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு? சம்மதம்' என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள் போதும். மற்றதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.' . - -

பூரணி தயங்கினாள். 'என்ன சொல்லட்டும் என்ற கேள்வி தொக்கி நிற்கும் முகக் குறிப்போடு அரவிந்தனை ஒரு தடவை பார்த்தாள். - . . 'என்ன பார்க்கிறாய்? முருகானந்தம் சொல்வது போல் சம்மதமென்று சொல்லிவிடுவது தான் நல்லது. இதைத் தவிர வேறு ஏற்பாடு எங்களிடம் இல்லை. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஒரு கணிசமான தொகை உதவி நிதியாகத் தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்றான் அரவிந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/215&oldid=555938" இலிருந்து மீள்விக்கப்பட்டது