பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 227

குரலில் பேசினாள். இரண்டு மூன்று நாட்களில் தோற்றமும், பேச்சும் தளர்ந்து நலிந்திருந்தாள் அவள். கவின் நிறைந்த அவளுடைய கண்களின் கீழிமைகளுக்கு அடியில் கருவளையம் போட்டிருந்தது. ஏதாவது சொல்வதற்கு வாய் திறந்தால் வார்த்தைகளை முந்திக்கொண்டு இருமல் பொங்கிப் பொங்கி வந்தது.

வரையறை இல்லாமல் சொற்பொழிவுகளுக்காகவும் பொதுப் பணிகளுக்காகவும் அவள் ஊர் ஊராக அலையத் தொடங்கிய போதே, அவளை ஓரளவு கட்டுப்படுத்தாமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான் அரவிந்தன்.

'நீயாகத்தான் இவ்வளவும் இழுத்து விட்டுக் கொண்டாய்! உடம்பையும் ஒரளவு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் நீ. உன்னுடைய உடல் நலமாக இருந்தால் தானே நீ இன்னும் நெடுநாட்கள் பொதுக்காரியங்களில் ஈடுபடலாம்' என்று அவளைக் கடிந்து கொண்டான் அரவிந்தன்.

புதன்கிழமை அவளை அழைத்துக் கொண்டு கோடைக்கானல் புறப்படுவது என்று ஏற்பாடு ஆகியிருந்தது. காற்று மாறுவதற்காக அவள் கோடைக்கானலில் தங்கி இருக்கும் காலத்தில் அவளுடைய உதவிகளுக்காக யாரை உடனிருக்கச் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. -

'வெளியில் வருவதற்குக் கூசிக்கொண்டு கிடக்கிறாள் என் மூத்த பெண். ஏதாவது கேட்டால் என்னோடு பேசுவதும் இல்லை. தனக்குத் தானே அழுகிறாள். நடந்ததை மறந்து கலகலப்பாகப் பழகமாட்டேன் என்கிறாள். உன்னோடு சிறிது காலம் இருந்தால் மாறலாமோ என்று என் மனத்தில் நம்பிக்கை உண்டாகிறது. அவளை உன்னோடு அனுப்பட்டுமா கோடைக் கானலுக்கு? இந்த சித்திரையில் அவளுக்கு எப்படியும் திருமணம் ஏற்பாடு செய்துவிடலாமென்று இருக்கிறேன். அதுவரையில் வேண்டுமானால் உன்னோடு கோடைக்கானலில் இருக்கட்டுமே. இப்போது அவளே உன் அருமையைப் புரிந்து கொண்டிருக் கிறாள். உன்னோடு அவள் வர ஒப்புக் கொள்வாள்' என்று மங்களேஸ்வரி அம்மாள் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/229&oldid=555952" இலிருந்து மீள்விக்கப்பட்டது