பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - குறிஞ்சிமலர்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக அந்த மலை நகரத்தின் அழகுகளைச் சுற்றிப் பார்த்தாள் அவள். வந்த அன்றைக்கு மறுநாள் அரவிந்தனுக்கும் மங்களேஸ்வரி அம்மாளுக் கும் கடிதங்கள் எழுதினாள். அரவிந்தனுக்கு எழுதிய கடிதத்தில் தான் உற்சாகமாக இருப்பதாகவும், அந்தச் சூழ்நிலையில் சில புதிய நூல்களைப் படித்து சிந்திக்க விரும்புவதாகவும், அவற்றை மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூல் நிலையத்திலிருந்து எடுத்து அனுப்பினால் உதவியாயிருக்கும் என்று எழுதியிருந்தாள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு எழுதிய கடிதத்தில் வசந்தாவை உற்சாகமாகவும் கலகலப்பாகவும் மாற்றிக் கொண்டு வருகிறேன். சித்திரையில் முகூர்த்தம் பாருங்கள், அதற்கு முன்பே மாப்பிள்ளை யையும் பார்த்து விடுங்கள் என்று எழுதியிருந்தாள்.

நான்கு தினங்களுக்குப் பின் அவள் பெயருக்கு ஒரு பெரிய புத்தகப் பார்சல் வந்தது. அரவிந்தன் கடிதமும் எழுதியிருந்தான். அதே தபாலில் வசந்தாவின் பெயருக்கு ஒரு கவர் வந்திருந்தது. அப்போது அவள் கடைவீதிக்குப் போயிருந்ததனால் பூரணியே அந்தக் கவரையும் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். உறையின் மேல் வசந்தாவின் பெயரை எழுதியிருந்த கையெழுத்து மங்களேஸ்வரி அம்மாளுடைய எழுத்தாகத் தெரியவில்லை. செல்லத்தின் கையெழுத்தும் இல்லை அது. யாரோ ஆண்பிள்ளை கையெழுத்தாக இருந்தது. மனத்தில் சந்தேகம் தட்டினாலும் பூரணி அதைப் பிரிக்கவில்லை. அவள் கடைவீதியிலிருந்து வந்ததும் அவளிடமே கொடுத்து விட்டாள். சந்தேகம் மட்டும் பூரணியிடம் தங்கியது. -

அன்று அந்தக் கடிதத்தை வசந்தா படித்தபின் அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதல் பூரணிக்கு வியப்பளித்தது. வசந்தாவின் இதழ்கள் அடிக்கடி ஏதோ பாட்டை முணுமுணுத்தன. கூந்தல் ரோஜாப் பூக்களைச் சுமந்தது. இதழ்களில் சிரிப்பு. முகத்தில் புதிய மலர்ச்சி; நடையில் உல்லாச மிதப்புத் தெரிந்தது. மாலையில் 'அக்கா இன்று ஏரிக்குப் போய்ப் படகில் சுற்ற வேண்டும்' என்று வசந்தாவே வலுவில் வந்து பூரணியை வற்புறுத்தினாள்.

'இன்று உனக்கு என்ன வந்து விட்டது வசந்தா? உற்சாகம் பிடிபடாமல் துள்ளுகிறதே?" என்று வியந்து வினவினாள் பூரணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/234&oldid=555957" இலிருந்து மீள்விக்கப்பட்டது