பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு) இரவு பகல் பாழுக்(கு) இறைப்ப- ஒருவாற்றான் நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர்.

- குமரகுருபரர்

மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறார் போல் மாலை வெயில் பொற் பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டு பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன. கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக் கொட்டிக் குவித்தாற் போல் மஞ்சள் குளித்து மயங்கிய இந்த மாலைப் போதுதான் எவ்வளவு மயக்கம் தருகிறது! தமிழில் மருள்மாலை என்று இதற்குப் பெயர் வாய்த்தது எத்தனை பொருத்தமானது? தமிழ்ச் சங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்கு அருகே கையில் துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தான் அரவிந்தன். அன்றைக்குச் சந்தை நாள் போலிருக்கிறது. திருவிழாக்கண்டதுபோல் வீதி கொள்ளாமல் மக்கள் கூடிக் கொண்டும், சிதறிக் கொண்டும் இருந்தார்கள். இரண்டு பக்கத்து நடைபாதைகளிலும் கூடைக்காரிகளின் கும்பல் தரை மேல் ஹோலிப் பண்டிகை கொண்டாடின மாதிரி தாறுமாறாகத் துப்பின வெற்றிலைச்சாறு. கால்களைப் பதித்து நடக்கக் கூசிற்று. மழை வந்துவிட்டால் கைகளில் தூக்கிச் சுமக்க நேரிடுமே என்று செருப்பணியாமல் வந்திருந்தான் அரவிந்தன். பாதங்களைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் மிகவும் விருப்பமுள்ளவன் அவன். வாதா மரத்தின் பழுத்த இலைகளைப் போல் நல்ல பாதங்கள் அவனுக்கு. செம்பொன் நிறம். அதில் அழகாகவும் அளவாகவும் விரல்கள். நீளமும் அகலமுமான பெரிய பாதங்கள் அவை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/235&oldid=555958" இலிருந்து மீள்விக்கப்பட்டது