பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 23 துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிற போது உண்டாகிற வறண்ட சிரிப்புத்தான் அது. -

வாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமாப் பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண் டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கி கொண்டு வந்தாள். பெரிய ரோஜப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவது போல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடி வந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின. - வழக்கம் போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும், மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விவரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.

கடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங் களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசி வரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால் காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.

'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பனம்சேர்த்தவன் அம்மா இவன் மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்து விட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லை யென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/25&oldid=555749" இலிருந்து மீள்விக்கப்பட்டது