பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 குறிஞ்சிமலர் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப்பாடசாலை அது. இன்னும் ஒழுங்காக நடந்து கொண்டு வருகிறது.

திருவேடகநாதரை வணங்கிவரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சி சுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விஷய மாகப் பூரணியைக் கலந்து கொண்டுவர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலையில் அவனையும் கூட்டிக் கொண்டு திருவேடகத்துக்குப் புறப்பட்டு விட்டார் அவர். -

மதுரைச் சீமையில் சோழவந்தானுக்கு அருகிலிருந்த வையை நதியின் வடபுறமும், தென்புறமும் அமைந்துள்ள பசுமை மயமான கிராமங்களின் அழகுக்கு ஈடு இணை இருக்க முடியாது. 'வையை என்னும் 'பொய்யாக் குலக்கொடி' என்று சிலப்பதி காரத்தில் இளங்கோவடிகள் வர்ணித்திருக்கிறாரே, அந்த வையை நல்லாளின் சீரிளமைத்திறம் காணவேண்டுமானால் தென்னஞ் சோலைகளுக்கு நடுவே அவள் அன்ன மென்னடை நடந்து கன்னிமை ஒயில் காட்டிக் கலகலத்து ஓடும் இப்பகுதியில் காணவேண்டும். பசுமைப் பூத்து எழுந்த வனத்தின் தூண்களை நட்டுப் பயிர் செய்தாற்போல் வாழைத் தோட்டங்கள். போகம் போகமாய் வெறும் நிலம் காண நேரமின்றிப் பசுமை காட்டி விளையும் நெற்கழனிகள். பசுமை குன்று புடைத்தெழுந்தாற் போல் செறிந்து தெரியும் கொடிக்கால்கள். அந்தப் பகுதியில் வையைக் கரையின் ஒவ்வொரு கிராமமும் ஓர் இன்பக் காவியம். ஒவ்வொரு காட்சியும் ஒரு சொப்பன செளந்தரியம். இந்தப் பகுதியின் வையைக்கரை மண்ணில் பிறந்தவரைப் போல் பெருமையும் கர்வமும் கொள்ளத் தகுதியுடையவர் வேறெங் குமே இருக்க முடியாதென்பது மீனாட்சி சுந்தரம் அவர்களின் திடமான எண்ணம். திருஞானசம்பந்தப் பெருமான் மதுரைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/256&oldid=555979" இலிருந்து மீள்விக்கப்பட்டது