பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 261

உங்களால் முடிந்தால் ஒரு நாள் சாயங்காலம் இந்த மருதாணியை நிறையப் பறித்து வெண்ணெய்போல் நன்றாக அரைத்து வைத்திருங்கள். படுத்துக் கொள்ளும் போது கையில் அப்பிக் கொண்டு படுத்துவிடலாம்' என்று அவள் சொல்லி வைத் திருந்தாள். -

சமையற்கார அம்மாளுக்கும் அன்றுதான் அதைச் செய் வதற்குக் கை ஒழிந்தது போலும். படிக்கும் தாகத்தோடு மதுரையி லிருந்து வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண் டிருந்த பூரணிக்கு அன்று படிக்க முடியாமலே போய் விட்டது.

'கைகளில் நன்றாக நிறம் பற்றவேண்டுமானால் சீக்கிரமாகப் போட்டுக்கொண்டு துரங்கப் போய்விட வேண்டும்' என்று, பூரணியையும், வசந்தாவையும் உட்கார்த்தி உள்ளங்கையிலும், நகங்களிலும் கால் பாதத்தைச் சுற்றியும் மருதாணிக் காப்பு இட்டு ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டாள் சமையற்கார அம்மா. குளிரோடு மருதாணி ஈரமும் கைகளில் குறுகுறுத்தது. நெடுநேரம் பேசிக் கொண்டே படுத்திருந்த வசந்தாவும் பூரணியும் தங்களை அறியாமலேயே நன்றாக உறங்கிப் போய்விட்டார்கள்.

மறுநாள் காலை சிவப்பு நிறம் பதித்த உள்ளங்கைகளையும் நகங்களையும் அழகுபார்த்துக்கொண்டே பூரணி படிப்பதற்காகப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். அவள் படித்துக்கொண்டிருந்த போது தபால்காரன் வந்து மங்கையர் கழகத்து முத்திரையோடு கூடிய உறையைக் கொடுத்துவிட்டுப் போனான். உறை கனமாக இருந்தது. உள்ளே இரண்டு மூன்று கடிதங்களை இணைத்து அதோடு தானும் ஒரு கடிதம் எழுதிப் பூரணிக்கு அனுப்பியிருந்தாள் காரியதரிசி அம்மாள்.

அவளுடைய புகழ் எங்கெங்கே பரவியிருக்கிறதென்பதையும் அவளது அறிவுச் செல்வத்தை எங்கெங்கோ உள்ள மக்கள் நுகர்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கடிதங்கள் அவளுக்கு உணர்த்தின. பூரணிக்கு அறிவின் பெருமிதம் மனம் நிறையப் பொங்கிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/263&oldid=555986" இலிருந்து மீள்விக்கப்பட்டது