பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 267

காரியங்களைத் திட்டமிடும் உரிமையைத் துணிந்து அவரை நம்பிக் கொடுத்து விடலாம் என்று எண்ணினாள் அவள். அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு விந்தையான நினைவும் எழுந்தது.

'இந்த அரவிந்தனிடம் அப்படி என்ன ஆற்றல் இருக்கிறது? எனக்காக நான் எதைச் சிந்தித்தாலும் அந்தச் சிந்தனையின் நடுவில் என் உடம்பிலும் நெஞ்சிலும் சரிபாதி பங்குகொண்டவர் போல் இவர் ஏன் நினைவுக்கு வருகிறார்? அரவிந்தன்! என்னுடைய ஊனிலும் உயிரிலும், அதனுள் நின்ற உணர்விலும், எல்லாவற்றிலும் நீங்கள் எப்போது கலந்து உறைந்தீர்கள்? எப்படிக் கலந்து உறைந்தீர்கள்? நானே தெரிந்து கொள்ள முடியாமல் எனக்குள்ளே வந்து நல்லனவும் தீயனவும் பகுத்துணரும்படி என்னைச் சிந்திக்க வைக்கிறீர்களே! என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். ஆணுக்கும் பெண்ணுக் கும் எண்ணங்களின் கலப்பில் உண்டாகும் தெய்வீகப் பேருணர்ச்சியாகக் கவிகள் பாடி வைத்திருக்கிறார்களே, அந்த உணர்ச்சியைத்தான் இந்த அரவிந்தனிடம் நான் காண்கிறேனோ - இப்படி நினைத்த போது பூரணிக்கு மெய் சிலிர்த்தது. மலர்கின்ற தாமரையைப்போல் இதயத்தில் ஏதோ ஒரு உணர்வு விகசித்தது. -

'எப்போதோ ஒரு பிறவியில் இந்த அரவிந்தனும் நானும் அன்றில் பறவைகளாக இருந்து காதல் வெற்றி பெறாமல் அழிந்திருக்கிறோமோ? எவனாவது கொடிய வேட்டுவன் எங்களை அம்பெய்து கொன்று எங்களையும் எங்கள் கனவுகளை யும் அழித்துவிட்டானா? - தாபம் என்கிற உணர்வு என்னவென்று இப்போது அவளுக்குச் சிறிது சிறிதாகப் புரிந்தது.

மலையின் சீத மென்காற்று இதமாக வீசியது எண்ணெய் நீராடிய அலுப்பில் இனிய நினைவுகளோடு சாய்வு நாற்காலி யிலேயே கண்ணயர்ந்து விட்டாள் பூரணி. அந்த மலைத் தொடர்களைக் கடந்து ஓடோடிச் சென்று என்னுடைய மனத்தை எனக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நீங்கள் பெரிய திருடர் என்று சிரித்துக் கொண்டே அரவிந்தனிடம் கூறிவிட வேண்டும் போலத் தேகத்திலும் இதயத்திலும் ஒரு தவிப்பை உணர்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/269&oldid=555992" இலிருந்து மீள்விக்கப்பட்டது