பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 . குறிஞ்சிமலர் இந்த இளமை அனுபவங்கள்தான் வாழ்க்கையைப் பற்றிய ஞானத்தையும், உயர்ந்த லட்சியங்களையும், அவன் மனத்தில் வளர்த்திருந்தன. ஏழைகளின் மேல் இரக்கமும் சமூகப்பிரச்சனை களில் அனுதாபமும் உண்டாகிற பக்குவமும் அவன் மனத்துக்கு கிடைத்திருந்ததென்றால், அதற்கும் அவனுடைய இளமை வாழ்வே காரணம். உல்லாசமும் இளமைத் திமிரும் கொண்டு கன்றுக்குட்டிகள் போல் திரிகிற வயதிலேயே உழைத்துத் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்' என்ற தாகமெடுத்து மதுரைக்கு ஒடி வந்தவன் அவன். அந்தத் தாகம் தணிந்தபின்பே அவன் பிடிவாதம் தளர்ந்தது.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் அவனுடைய தமிழாசிரியர் ஒருவர் அவனை மீனாட்சி அச்சக உரிமையாளரிடம் அழைத்துப் போய் சிபாரிசு செய்ததும், அவன் அங்கு சேர்ந்து தன் திறமையாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்ததும் காலத்தின் போக்கில் நிகழ்ந்து நிறைந்தவை. தான் நினைத்தபடியே உழைத்து மேல்நிலைக்கு வந்து விட்டதை நினைக்கும் போது அரவிந்தன் ஆச்சரியம் கொள்வான். தன்னைப் போன்றவர்களுக்காகவே, 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்று திருவள்ளுவர் கூறிச் சென்றிருக்கிறாரோ என்று நினைத்து நினைத்து வியப்புக் கொள்வான் அவன்.

அன்று கோடைக்கானலுக்குப் புறப்படுகிற நேரத்துக்கு அந்தத் தந்தி வந்த போது துன்பங்கள் நிறைந்த தன் இளமை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் சித்திரங்கள் போல் நினைவு வந்தது அரவிந்தனுக்கு. அவற்றை நினைக்கத் தூண்டியது அந்தத் தந்திதான்.

"சிற்றப்பா இறந்து விட்டார் உடனே புறப்பட்டு வரவும்' என்பது தான் தந்தியில் கண்டிருந்த வாசகம். கடைசிக் காலத்தில் அந்தச் சிற்றப்பா நீரிழிவு வியாதியால் படுத்த படுக்கையாகி விட்டார். தன் பிறந்த வீட்டு வழியில் எவரையாவது தத்து எடுத்துக் கொள்ளச் செய்து சொத்துகள் எல்லாம் கைமாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பகற்கனவு கண்டு கொண்டிருந்த சித்தி அவரையும் முந்திக் கொண்டு இறந்து போயிருந்தாள். தனியாக நோயுடன் கிராமத்தில் வேதனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/278&oldid=556001" இலிருந்து மீள்விக்கப்பட்டது