பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 279

'செய்திருக்கட்டுமே, அப்பா அவருடைய பணத்தை நல்லகாரியத்துக்குச் செலவழித்து அத்தனைக்கும் பழிவாங்கி விடேன் நீ. '

என்னென்னவோ சமாதானங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி அரவிந்தனை வழிக்குக் கொண்டுவந்தார் மீனாட்சி சுந்தரம். காலையில் அந்த நேரத்துக்குச் சரியாக இராமேசுவரம் போகிற இரயில் இருந்தது. முருகானந்தமும் அவரும் அரவிந்தனைக் காரில் கொண்டுபோய் இரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். வேண்டா வெறுப்பாகச் சிற்றப்பனுக்கு அந்திமச் சடங்குகள் செய்ய ஊருக்குப் புறப்பட்டான் அவன். போகும் போது இரயிலில் அவன் மனம் பழைய சிந்தனைகளில் ஆழ்ந்தது. நினைவுகளே பெருங்காற்றாக மாறி அந்தக் காற்றில் நெஞ்சினிடையே மூளும் சிந்தனைக் கனல் கொழுந்து பாய்ச்சிச் சுடர் பரப்பிற்று. எதை எதையோ எண்ணிக் கொண்டு பயணம் செய்தான் அவன். - -

'மீனாட்சிசுந்தரமும், முருகானந்தமும் கோடைக்கானல் போகிறார்களே! அவர்கள் சொல்லிப் பூரணி தேர்தலில் நிற்க ஒப்புக்கொண்டு விடுவாளா? இந்தச் சமயத்தில் இந்தப் பெரிய காரியத்துக்கு இணங்கலாமா, வேண்டாமா என்று பூரணி முடிவு செய்ய என்னுடைய கருத்தையல்லவா கேட்பாள்? பார்க்கலாமே என்னைக் கேட்டுக்கொண்டு முடிவுசெய்கிறாளா? அல்லது மீனாட்சிசுந்தரம் விவரம் சொல்லிய அளவில் ஒப்புக்கொண்டு விடுகிறாளா? இந்தச் சந்தர்ப்பத்தில் நானே போய் அவளைச் சந்தித்து நல்லது கெட்டது இரண்டையும் சீர்தூக்கித் தேர்தலில் நிற்கலாமா நிற்கலாகாதா என்று தீர்மானம் செய்தால் அவளுக்கு ஆறுதலாக இருக்கும். தந்தியில் நானும் முருகானந்தமும் புறப்பட்டு வருவதாகத் தான் கொடுத்திருக்கிறார். நான் இங்கே இந்தக் கிழவனுக்குக் கொள்ளிவைக்க வந்தாயிற்று. என்னை எதிர் பார்த்துப் பெரிதும் ஏமாற்றமடைந்திருப்பாள் பூரணி" என்று நினைத்தான் அரவிந்தன். எதற்கோ ஆசைப்பட்டுக் கொண்டு அநாவசியமாகப் பூரணியைத் தேர்தலில் வம்புக்கு இழுக்கும் மீனாட்சிசுந்தரத்தின் மேல் கோபம் தான் வந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/281&oldid=556004" இலிருந்து மீள்விக்கப்பட்டது