பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 குறிஞ்சிமலர் அவனுக்கு. நான் என்ன செய்ய முடியும்? என்னால் முடிந்த மட்டும் அவருடைய இந்த எண்ணத்தைத் தடுத்துவிட முயன் றேன். முடியவில்லையே? பிடிவாதமாகத் திருவேடகத்துக்கும் கூட்டிக் கொண்டு போய்ப் பூக்கட்டி வைத்தும் பார்த்து உறுதி செய்து கொண்டு விட்டாரே என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.

இரயிலிலிருந்து இறங்கி அவன் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது காலை ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது. உறவினர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொரு வயதான பாட்டிமார்கள் அவனிடம் போலியாக அழுதுகொண்டே துக்கம் விசாரிக்க வந்தார்கள். மற்றவர்கள் சம்பிரதாயமாக அழுகையெல்லாம் இல்லாமல் வாய் வார்த்தை யில், “சிற்றப்பா காலமாகி விட்டாரே தம்பீ' என்று தொடங்கி விசாரித்தார்கள். விசாரித்தவர்களைவிட விசாரித்தோமென்று பேர் பண்ணியவர்கள் தான் அதிகம்.

“கணித பாடத்தில் சரியான விடைவந்தாலும் வழி எழுதாத கணக்குத் தப்புக்குச் சமம்தான். செல்வமும் செல்வாக்கும் அற வழியில் ஈட்டப்படாமல் வேறு வழியில் குவிக்கப் பட்டிருந்தால் வழி எழுதாத கணக்கைப்போல் அவை மதிப்பிழந்து நிற்கின்றது" என்பதை அன்று அங்கே சிற்றப்பாவின் ஈமச் சடங்கிலே கண்டான் அரவிந்தன். உள்ளூரில் நல்லவர்கள் யாரும் மயானம் வரைகூட உடன் வரவில்லை. தன்னைப்பற்றிக் கூடச் சிலர் ஊரில் கேவலமாகப் பேசிக்கொண்டதாக அரவிந்தன் காதுக்குத் தகவல் வந்தது. நேரிலும் கேள்விப்பட்டான். 'பணம் அல்லவா பேசுகிறது. இந்தப் பையன் அரவிந்தனுக்காகவா இத்தனை பாடுபட்டுச் சேர்த்து வைத்தான் கருமிப்பயல்' என்று அவன் காது படவே ஒருவர் சொன்னார். அவருக்குத் தாயாதிப் பொறாமை.

'என்னவோ விரோதம்! அவன் கொள்ளி போட வர மாட்டான் என்றீரே, சொத்து ஐயா! சொத்து! நாய் மாதிரி ஓடி வந்திருக்கிறான் பாரும்' என்று வேறு ஒருவர் பேசியது காதில் விழுந்தபோது அரவிந்தனுக்கும் மனம் புண்பட்டது. தன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/282&oldid=556005" இலிருந்து மீள்விக்கப்பட்டது