பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தேன் வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோரென் நேருறக் கண்டுளந் துடித்தேன் ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

- திருவருட்பா

தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக் கானலுக்கு வரமுடியாமல் சொந்தக்கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல் அவளும் எவ்வளவோ திறமையாகத் தான் மறைக்க முயன்றாலும் மீனாட்சிசுந்தரம் அதைத் தம் கூர்மையான பார்வையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்ப விட்டு விடவில்லை. பெண், இரசம் பூசிய கண்ணாடியைப் போன்றவள். தன்னில் படிகிற அல்லது படுகிற எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்க முடிவதில்லை. மறக்கவோ மறுக்கவோகூட முடிவதில்லை.

'மதுரையில் மங்களேஸ்வரி அம்மாள், செல்லம், என் தங்கை எல்லோரும் சுகந்தானே? மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா? அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக் கிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?' என்று தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாறே விசாரித்தாள், பூரணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/284&oldid=556007" இலிருந்து மீள்விக்கப்பட்டது