பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 287 இங்கு வந்து உன்னைச் சம்மதிக்கச் செய்திருப்பான். அவன் வந்திருந்தால் என்னுடைய வேலை சுலபமாகியிருக்கும். உனக்கு இத்தனை சிரமப்பட்டு நானே விளக்கம் சொல்ல வேண்டியிராது. அவன் பாடு, உன் பாடு என்று விட்டிருப்பேன்."

வைரம் பாய்ந்த மரத்தில் ஸ்குரு ஆணி இறக்குகிற மாதிரி மீனாட்சிசுந்தரம் அவள் மனத்தில் தம் கருத்தைப் பதித்துவிட முயன்றார். இலங்கை, மலாயா முதலிய இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வந்திருப்பதைப் பற்றி பூரணி அவரிடம் கூறினாள்; அவர் கேட்டதைப் பற்றி ஒரு முடிவும் சொல்லவில்லை. 'உன் பேரில் அபேட்சை மனுத் தாக்கல் செய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். திருவேடகத்துக்குப் போய்ப் பூக்கட்டி வைத்துப் ப்ார்த்ததில் நல்ல பூவே கிடைத்திருக்கிறது. நீ என்னைக் கைவிட்டு விடாதே அம்மா' என்று சுற்றிச் சுற்றித் தம் வேண்டுகோளையே வற்புறுத் திக் கொண்டிருந்தார். அவள் பிடிகொடுத்துப் பேசவில்லை.

‘'நீ இலங்கை, மலாயா எல்லா இடங்களுக்கும் போய்ப் புகழ்பெற்று வா, அம்மா! அதனால் எங்களுக்கெல்லாம் பெருமை தான். அவற்றோடு இந்தப் பெருமையையும் நாங்களாகப் பார்த்து உனக்கு அளிக்கிறோம். மறுக்காமல் ஏற்றுக்கொள். இதில் வெற்றி பெற உன்னால் முடியும். வெற்றி பெற்றால் இதனால் நீயும் உயர்வு அடையலாம். நாடும் உயர்வு பெறும்' என்றார். . .

"பார்க்கலாம் எனக்குச் சிந்திக்க நேரம் கொடுத்தால் நல்லது. 'வந்தோம், உடனே கேட்டுச் சம்மதம் பெற்றவுடன் திரும்பலாமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது, இரண்டு மூன்று நாட்கள் இருந்துதான் போக வேண்டும் நீங்கள். கோடைக்கானல் மூன்று தினங்கள் தங்குவதற்குக் கூடத் தகுதியில்லாத ஊரா, என்ன?" என்று கேட்டாள் பூரணி.

'இரண்டு மூன்றுநாள் தங்குவது பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை, அம்மா! நீ விரும்பினால் இது பற்றிப் பேச அரவிந்தனையும் வரவழைக்கிறேன். உன்னுடைய தயக்கத்திற்குக் காரணமே அவன் இல்லாமல் முடிவு செய்யலாகாது என்பதுதான் என்று எனக்குப் புரிகிறது பெண்ணே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/289&oldid=556012" இலிருந்து மீள்விக்கப்பட்டது