பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 291

காண்பித்தேன். சாயங்காலம் பில்லர் ராக்ஸ்’ மலைப்பகுதிக்குப் போகத் திட்டம் போட்டிருக்கிறோம் என்றாள் வசந்தா.

'ஆகா! தாராளமாகப் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். என்னை மட்டும் கூப்பிடாதீர்கள். எனக்கு வர ஒழிவு இருக்காது. புத்தகங்கள் படிக்க வேண்டும்' என்று கூறி விட்டு மெல்லச் சிரித்தாள் பூரணி, முருகானந்தத்தின் முகத்தில் மிக மென்மையான தும் நுணுக்கம் நிறைந்ததுமான புதிய அழகு ஒன்று வந்து பொருந்தியிருப்பதைப் பூரணி கூர்ந்து பார்த்து உணர்ந்தாள். ஓர் இளம் பெண்ணின் உள்ளத்தை வெற்றிகொண்டுவிட்டோம் என்ற பெருமையில் ஆண்பிள்ளைக்கு உண்டாகிற இன்பமயமான கர்வத்தின் அழகா அது? பகல் உணவு முடிந்ததும் கோடைக் கானலுக்கு அருகில் பட்டி வீரன் பட்டியில் தமக்கு நெருங்கிய நண்பராகிய காப்பித் தோட்ட முதலாளி ஒருவர் இருப்பதாகவும், போய் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு மாலை ஏழு மணிக்குத் திரும்பி விடுவதாகவும் கூறி விட்டு மீனாட்சிசுந்தரம் காரில் புறப்பட்டுப் போய் விட்டார். பூரணி புத்தகத்தில் மூழ்கி இருந்தாள்.

மாலை மூன்றரை.மணிக்கு வசந்தாவும் முருகானந்தமும் அவளிடம் வந்து சொல்லிக் கொண்டு சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வசந்தா அத்தனை அழகாக அலங்காரம் செய்து கொண்டு பூரணி இதற்கு முன்பு பார்த்ததில்லை. முருகானந்தம் தனது முன் நெற்றியில் வந்து அடங்காப்பிடாரி போல் சுருண்டிருக்கிற தலை மயிரை அன்று வெளியே புறப்படுகிற போது அழகாக வாரி விட்டுக் கொண்டிருந்த அதிசயத்தையும் பூரணி கவனித்தாள். காதல் என்னும் உணர்வுக்கு இத்தனை தூரம் மனிதர்களைக் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக்கி விடுகிற சக்தியும் உண்டோ? என்று எண்ணி வியந்தாள் அவள். இந்தக் குழந்தைகளின் இந்தப் பிள்ளைத்தனமான அன்பை ஏழமை, ஏற்றத் தாழ்வுகள் இடையே புகுந்து கெடுத்து விடக் கூடாதே" என்ற ஏக்கமும் உண்டாயிற்று பூரணிக்கு. பங்களா வாசலில் இறங்கி, பட்டுப் பூச்சிகள் பறந்து போவதைப் போல் அவர்கள் போவதைப் பார்த்து மனம் மலர்ந்தாள் பூரணி. நியாயமான காதல் உணர்வு என்பது உல்கத்துக்கே அழகு உண்டாக்கு கிற ஒரு புனிதசக்தி என்று அந்தச் சமயத்தில் அவளுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/293&oldid=556016" இலிருந்து மீள்விக்கப்பட்டது