பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 29 பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல் தான் அவரும் வாழ்ந்து போய் விட்டார். - அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும் போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்?

குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்து விட்டாலல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும் கல்லூரியிலிருந்து அப்பாவின் சேமநிதி (பிராவிடண்டு பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக்காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.

மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.

அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சனைகள் வாயிற் படியில் வந்து நின்று கதவை அடைத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/31&oldid=555755" இலிருந்து மீள்விக்கப்பட்டது