பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 3.19

முகில்காட்டும் குழல்காட்டி நன்பாட்டுப்பொருள் நயம்போல்

நகைக்கின்றாய் நகைக்கின்றாய் பண்பாட்டுப் பெருமையெலாம்

பயன்காட்டி நகைக்கின்றாய்.

-அரவிந்தன்

- கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோவில் மலைதான். குறிஞ்சி யாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட் துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலைகளே வாய் திறந்து சிரித்துக் கொண்டிருப்பது போல் பூக்கள் பூத்திருக்கும். அந்த அழகிய சூழலில் பசும் புல் நிறைத்துப் படர்ந்த ஒரு மேட்டின் மேல் அரவிந்தனும் பூரணியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து மரத்தில் இரண்டு பச்சைக் கிளிகள் சிறிது தொலைவு இணையாகப் பறப்பதும், கிளைக்குத் திரும்புவதுமாக விளையாடிக்கொண்டிருக்கின்றன. எங்கோ மிக அருகிலிருந்து சற்றைக்கொருமுறை குயில் கூவியது. அந்தக் குயில் ஒலி ஒருமுறை கேட்டு இன்னொரு முறை ஒலிக்குமுன் இருந்த இடைவெளி விநாடிகள் அதன் இனிமையை உணர்வதற்கென்றே கேட்போருக்குக் கொடுத்த அவகாசம்போல் அழகாயிருந்தது. செம்பொன் மேனிச் சிறுகுழந்தைகள் அவசரமாக ஒடி வந்து கள்ளச் சிரிப்போடு முகத்தை நீட்டி விட்டுப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிற மாதிரி, பெரிய பெரிய ரோஜாச்செடிகள் தத்தம் பூக்கள் காற்றில் முன்புறம் ஆடிக் கவிழ்வதும், விரைவாகப் பின்னுக்கு நகர்வதுமாகக் காட்சி யளித்தன. வான விரிப்பும், மலைப்பரப்பும், திசைகளும், எங்கும், எல்லாம் அழகு மயமாயிருந்தன. ஊழியில் அழிந்து அமிழ்ந்து மீண்டும் மேலெழுந்து மலர்ந்த புது யுகத்துப் புவனம்போல் எங்கும் அழகாயிருந்தது. தனிமையின் இனிமையில் தோய்ந்த அழகு அது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/321&oldid=556044" இலிருந்து மீள்விக்கப்பட்டது