பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 குறிஞ்சி மலர்

யின் நடுவே தூக்கம் வரவில்லை. அவர்களில் ஒரு புத்திசாலிப் பெண் மற்றவர்களைப் பார்த்து ஒரு யுக்தி சொன்னாள்.

'நமக்குத் தூக்கமோ வருவதாக இல்லை. இந்தப் பூக்கூடைகளை எடுத்து வேறிடத்தில் வைக்கவும் முடியாது. நம்மிடத்திலுள்ள மீன் கூடைகளைக் கொஞ்சம் நனைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டால் இந்தப் பூவாசனையும் மீறிக்கொண்டு நமக்கு பழக்கமான நாற்றம் உண்டாகும். உடனே சுகமாகத் தூங்கிவிடலாம்' என்றாள். யாவரும் அவளுடைய யோசனையை ஏற்று அப்படியே செய்து தமக்குப் பழக்கமான நாற்றத்தை உண்டாக்கிக்கொண்டு தூங்கினார்களாம். பழக்கமான வாசனை' என்று சொல்லுகிறோமே, அது இத்தகையதுதான் அரவிந்தன்! உங்களைத் துன்புறுத்த நினைத்த பர்மாக்காரரையும், புதுமண்டபத்து மனிதரையும் இந்த உபகதையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்!'

“எத்தனை அற்புதமான கருத்துக்களை மனத்தில் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள் சங்கீதக் கச்சேரிகளுக்குக் கூட்டம் கூடுகிறார்போல் இவள் சொற்பொழிவுகளுக்குக் கூட்டம் கூடுவதின் இரகசியம் இந்தக் கருத்தழகு மிக்க பேச்சுத்தானே! என்று உள்ளத்துக்குள் வியந்து கொண்டான் அரவிந்தன்.

'அரவிந்தன்! நானாகவே என்னைப்பற்றி உங்களிடம் இப்படிச் சொல்லிக் கொள்கிறேனே என்று நினைக்காதீர்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு அடிக்கடி ஒரு கம்பீரமான கனவுத் தோற்றம் உண்டாகும். பசியும், நோய்களும், வறுமையும், வாட்டமும் கொண்டு தவிக்கும் இலட்சக் கணக்கான ஆண் பெண்களின் இருண்ட கூட்டத்துக்கு நடுவே நான் கையில் ஒரு தீபத்தை ஏந்திக் கொண்டு செல்கிறேன். என் கைத் தீபத்தின் ஒளி பரவி, பசியும் நோயும் அழிகின்றன. வறுமையும், வாட்டமும் தொலைகின்றன. இலட்சக்கணக்கான முகங்களில் என்னையும் என் கைத் தீபத்தையும் கண்டவுடன் மலர்ச்சி பொங்குகிறது. நான் மேலே மேலே முடிவற்று நிலையற்று அந்த ஒளி விளக்கோடு நடந்து கொண்டே இருக்கிறேன். நடக்க நடக்க அந்த விளக்கின் சுடர் பெரிதாகிறது. சுடர் பெரிதாகப் பெரிதாகச் சுற்றிலும் பரந்து தென்படும் மக்கள் வெள்ளம் என் கண்களுக்கு நன்றாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/326&oldid=556049" இலிருந்து மீள்விக்கப்பட்டது