பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 3 Í நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுபடியாக முடியுமா?

மதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையுந்தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்க மாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும்தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பது போல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுகிற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.

மணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்ற போது குழந்தை துரக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.

சந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போது தான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஒரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப் பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ் சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்து விட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்து விட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகை களும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண் சிவப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக் கவர்ச்சி தரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/33&oldid=555757" இலிருந்து மீள்விக்கப்பட்டது