பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 குறிஞ்சி மலர்

வார்த்தைகள் சொல்லக்கூடத் தோன்றாமல் போய்விட்டதே. சே!

சே! அன்பு வெள்ளமாக நெகிழ்ந்துவிடத் தெரிய வேண்டாமோ

இந்த உள்ளத்துக்கு? அன்று தலை நிறையப் பூவும், கைகள்

நிறைய வளையல்களும், மனம் நிறைய இவரைப் பற்றிய

தாகமுமாக நிலைக்கண்ணாடிக்கு முன்னால் பித்துப் பிடித்தவள் போல் வீற்றிருந்தேனே! அந்த ஏக்கம், அந்த நெகிழ்ச்சி இன்று

இவரருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தபோது, உரையாடினபோது

எங்கே போனது? பக்திக்கும் காதலுக்கும் அகங்காரம்

இருக்கலாகாது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பது எத்தனை

உண்மை என்னுடைய அகங்காரத்தைக் குத்திக்காட்டும் நோக்கத்

தோடுதான் உயரத்தில் ஏறிச் செல்லும் இந்தப் போட்டியில்

நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒரு நாள் களைப்படைந்து கீழேயே தங்கிவிடுவேன்' என்றாரா? அல்லது

வேடிக்கையாகச் சொன்னாரா? பரமஹம்சருடைய கதையையும், என்னுடைய இலட்சியக் கனவுகளையும் உண்மையாகவே மனம்

உருகித்தான் இன்று இவரிடம் கூறினேன். இவர் என்னிடம்

கலகலப்பாகப் பேசமுடியாமல் போனதற்கு என்னுடைய இந்த

அதிகப் பிரசங்கித்தனமும் ஒரு காரணமோ? குறும்புப்

பேச்சும் சிரிப்புமாக மனம் விட்டுப் பழகும் இவர், இன்று

நான் இவற்றையெல்லாம் கூறியபின் எதையோ குறைத்துக்

கொண்டு ஏதோ ஒர் அளவோடு பழகுவது போல் அல்லவா

தெரிகிறது?

அவள் மனத்தின் சிந்தனைத் தவிப்புத் தாங்கமுடியாத எல்லையைத் தொட்டது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளா மல் இருவரும் வழிப்போக்க்ர் போல் நடந்து செல்வது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அந்த அவசியமற்ற மெளனத்தை அவளே துணிந்து கலைத்தாள். 'இன்று உங்களுக்கு என்ன வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் வருகிறீர்கள்? என்மேல் எதுவும் வருத்தமோ?

இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். அவன் எப்போதும் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் அவள் உள்ளம் தவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/330&oldid=556053" இலிருந்து மீள்விக்கப்பட்டது