பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி , 329

'நன்றாயிருக்கிறதே கதை நீ ஏதோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு வருவதுபோல் தோன்றியது. அதனால்தான் பேச வில்லையே தவிரப் பேசாமலே நடந்து போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நான் ஒன்றும் தீர்மானம் செய்து கொள்ள வில்லையே?"

'பண்பாட்டுப் பெருமையெல்லாம் பயன் காட்டி நகைக் கின்றாய் என்று அவளுடைய சிரிப்புக்கு, இலக்கணம் வகுத்துச் சொன்னாற்போல் அரவிந்தன் பாடினானே; மெய்ப்பிப்பதுபோல் நகைத்தாள் பூரணி.

'அனுப்பியிருந்த புத்தகங்களையெல்லாம் படித்தாயா பூரணி?"

"எல்லாவற்றையும் மனந்தோய்ந்து அனுபவித்துப் படித்தேன். இந்த மலைப்பிரதேசத்துச் சூழ்நிலையே படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் அதிகமாக சுறுசுறுப்பை அளிக்கிறது."

வானம் நன்றாக இருண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துாற்றல் விழுந்தது. இருவரும் வேகமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போதே மீனாட்சி சுந்தரம் பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய கார் முன்புறம் நின்று கொண்டிருந்ததிலிருந்தே அதைத் தெரிந்து கொண்டார்கள். மங்களேசுவரி அம்மாள் முதலியவர்களும் ஏரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தார்கள். அன்று இரவும், மறுநாளும் அவர்கள் சேர்ந்து பேசி முடிவாகச் சில தீர்மானங்களைச் செய்து கொண்டார்கள். நீண்ட நேர விவாதத்துக் கும் மறுப்புக்களுக்கும் பிறகு பூரணி தேர்தலில் நிற்பதற்குச் சம்மதம் அளிக்க வேண்டியதாயிற்று. அரவிந்தனே தன்னை வற்புறுத்தி வேண்டிக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்ட போது அவளால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அவள் நிற்க மறுத்துவிட்டால் பர்மாக்காரருடைய் கெடுபிடிகளுக்கும், மிரட்டலுக்கும் பயந்துவிட்டதாக ஆகும் என்பதையும் அரவிந்தன் முன்பே குறிப்பாக அவளுக்குச் சொல்லியிருந்தான். எப்படியோ தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை அவளை அந்தப் பொறியில் மாட்டிவைத்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/331&oldid=556054" இலிருந்து மீள்விக்கப்பட்டது