பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 331

கழகத்துக்கு மறுமொழி எழுதிவிட்டாள் பூரணி, எங்கும், எப்பொழுதும், புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளி நாட்டுப் பயண அனுமதியை 'இண்டர்நேஷனல் பாஸ் போர்ட்டாக வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன். பாஸ்போர்ட்டுக்கான புகைப்படத்தை எடுத்துக் கொள்வதற்காக அன்று மாலை பூரணியை அங்குள்ள ஒரு புகைப்பட நிலையத்துக்கு அழைத்துப்போயிருந்தான் அரவிந்தன். அந்தப் புகைப்பட நிலைய உரிமையாளர் அவர்களைப் புதுமணம் புரிந்துகொண்ட இளம் ஜோடியாக எண்ணியதால் ஏற்பட்ட நளினமான குழப்பங்களில் சிறிது நேரம் இருவருமே நாணிக் கூசி நிற்கும் நிலையாகிவிட்டது. பூரணியைப் பாஸ்போர்ட் அளவு படம் எடுத்தபின், அவர்கள் இருவரையும் அருகில் ஒன்றாக நிறுத்தி ஒருபடமும் எடுத்துக்கொண்டார் உரிமையாளர். இரண்டு பேருமே பார்க்க இலட்சணமாக இருந்ததினால் காட்சி அறையில் (ஷோரூமில்) அந்தப் படத்தை வைக்கலாம் என்பது அவர் விருப்பமாயிருந்தது. ---

புகைப்பட நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த இந்த இன்பக் குழப்பங்களால் நெஞ்செல்லாம் மெல்லிய நினைவு களும் கனவுகளும் குமிழியிட அரவிந்தனும் பூரணியும் வீடு திரும்பியிருந்தார்கள். அப்போது மங்களேசுவரி அம்மாளும் மீனாட்சி சுந்தரமும் வீட்டு வாயிலிலேயே அவர்களை எதிர் கொண்டனர். -

'உன்னிடம் தனியாக ஒரு சங்கதி கேட்க வேண்டும். கொஞ்சம் இப்படி என்னோடு வருகிறாயா?" என்று மங்களேசு வரி அம்மாள் பூரணியைத் தனித்து அழைத்துப் போனாள்.

அதே வார்த்தையை அரவிந்தனிடம் கூறி அவனை வேறொரு புறம் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மீனாட்சி சுந்தரம். இருவர் நெஞ்சிலும் பெரிதாய்ப் புரிந்தும் புரியாததுமாய்க் கேள்விக் குறிகள் பூத்துப் பொலிந்து நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/333&oldid=556056" இலிருந்து மீள்விக்கப்பட்டது