பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே

- திருமந்திரம்

அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சி சுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக்கொண் டிருந்தார்கள்.

'எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்? ஆக வேண்டிய நல்ல காரியம் காலாகாலத்தில் ஆனால்தானே நன்றாக இருக்கும்? பூரணிக்கு வயதும் கொஞ்சமா ஆகிறது?’ என்று மங்களேசுவரி அம்மாள்தான் முதலில் அந்தப் பேச்சைத் தொடங்கினாள். சரியான நேரத்தில் பொருத்தமாக அந்த அம்மாள் அதை நினைவு படுத்துவதாகத் தோன்றியது மீனாட்சி சுந்தரத்துக்கு. அவர் ஒப்புக் கொண்டார்.

"செய்ய வேண்டியதுதான் எனக்குக்கூட முன்பே இப்படி ஒரு நினைப்பு உண்டு. அந்தப் பெண் பூரணிக்கு இதையெல்லாம் காலம் நேரம் பார்த்துச் செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அரவிந்தன் நான் சொன்னால் கேட்பான். அவனுக்கும்தான் யார் இருக்கிறார்கள்? அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நாமாகப் பார்த்துச் சொல்லித் தூண்டிச் செய்து வைத்தால்தான் நல்லது. இரண்டுமே அப்பாவிகள். இலட்சியம், கொள்கை, அது, இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/334&oldid=556057" இலிருந்து மீள்விக்கப்பட்டது