பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 333 என்று ஒரேவிதமான மனமுடையவர்கள். வரட்டும், இருவரையும் முறைக்காக ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு சேர்த்தே ஏற்பாடு செய்துவிடுவோம்...'

"நான் அவளைக் கேட்டுக் குறிப்பறிந்துகொள்கிறேன். நீங்கள் அரவிந்தனைக் கேட்டு விடுவது நல்லது. நாம்தான் இவர்களுக்கு எல்லா உறவும். நீங்கள் அரவிந்தனின் தந்தையா கவும், நான் பூரணியின் தாயாகவும் பாவனை செய்துகொண்டு இருந்து நாமாகப் பார்த்து நடத்த வேண்டிய நல்ல காரியம் இது" என்று மங்களேசுவரி அம்மாள் கூறி வற்புறுத்தினாள்.

இந்தத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் புகைப்பட நிலையத்திலிருந்து திரும்பிய அரவிந்தனையும் பூரணியையும் இதைக் கேட்டு முடிவு செய்வதற்காக அவர்கள் தனித்தனியே அழைத்துக் கொண்டு போனார்கள்.

மங்களேசுவரி அம்மாள் தன்னிடம் அதுபற்றிக் கூறிக் கேட்டபோது பூரணி மணப் பொண்ணாகவே மாறிவிட்டது போல் நாணித் தலைகுனிந்து நின்றாள். பரிபூரணமான இன்ப அனுபவத்தை மனம் அடைகிறபோது நெஞ்சுக்கும் நினைப்புக் கும்தான் வேலை. வாய்க்கும் நாவுக்கும் வேலை இல்லை. வாயும் நாவும் பேசும் ஆற்றல் இழந்து போகின்றன. பதில் சொல்லும் உணர்வு தடைப்பட்டுப் போகிறது. எதிரே நின்றுகொண்டு கேட்கும் மங்களேசுவரி அம்மாளின் முகத்தை நேரே பார்க்கக் கூசிற்று பூரணிக்கு. தன்னாலும், வெல்ல முடியாத அளவற்ற நாணத்தை அப்போது உணர்ந்து ஒல்கி ஒசிந்து நின்றாள் அவள். அந்த ஒரே கணத்துக்குள் பூரணியின் முகத்தில் புதுப்புது அழகுகள் பூத்தன. ஆயிரக்கணக்கானவர்களுக்கு நடுவில் மேடையேறி நின்று ஆற்றொழுக்குப்போல் இடையறாமல் பெரிய கருத்துக்களைப் பேசும் இலட்சிய நங்கை பூரணியா அப்படி நாணி நிற்கிறாள் என்று மங்களேஸ்வரி அம்மாளுக்குச் சந்தேகம் உண்டாகி விட்டது. பெண் எந்த உணர்ச்சிகளைத் தனக்கே உரிமையாகப் பெற்றிருப்பதால் பெண்ணாக இருக்க முடிகிறதோ, அந்த மெல்லிய உணர்ச்சிகளை அவளால் ஒரு போதும் விடமுடியாதென்று அந்த அம்மாளுக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/335&oldid=556058" இலிருந்து மீள்விக்கப்பட்டது