பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 குறிஞ்சி மலர் சொல்வோம். சிலவற்றைச் சொல்ல முடியாது. இன்னும் சிலவற்றைச் சொன்னாலும் உங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாது.'

'அதெல்லாமில்லை அரவிந்தன். நீங்கள் என்னென்னவோ சம்பந்தமில்லாமல் சொல்லி என்னை ஏமாற்றித் தட்டிக் கழித்து விடப் பார்க்கிறீர்கள்."

சிரிப்பு மறைந்து உருக்கமாக எதையோ பேசத் தொடங்கப் போகிற பாவனையில் அரவிந்தனின் முகம் மாறியது. அவன் பெருமூச்சு விட்டான். கிழித்துச் சிதறின கருநீலப் பட்டுத் துணிகள்போல் சிதறல் சிதறலாக மேகத் துணுக்குகள் நீந்தும் வானத்தை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். இலட்சியத் துடிப்பும் உயர்ந்த தன்மையும் பொருந்தியவற்றை நினைக்கும்போதும், பேசும்போதும், வழக்கமாக அவனுடைய கண்களிலும், முகத்திலும் வருகிற ஒளி அப்போதும் வந்து சாயலிட்டு நின்றது. அவன் மங்களேசுவரி அம்மாளை நோக்கிச் சொல்லலானான்:

'அம்மா இன்னும் சிறிது காலத்திற்கு மனத்தினால் வாழ்ந்து கொண்டிருக்க மட்டும் எங்களை அனுமதியுங்கள். உடலால் வாழும் வாழ்க்கையைப் பற்றி நான் இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. உடம்பைப் பற்றித் தொடர்கிற வாழ்க்கை ஒரு பெரிய பொய் மயக்கமாகவே இந்த விநாடி வரை எனக்குத் தோன்றுகிறது. காக்கைக் கூட்டில் இடப்பட்ட குயில் முட்டை யைத் தன்னுடையது, தனக்கேயுரியது என்று தவறாக மயங்கிப் பேணி வளர்க்கும் பேதைக் காக்கையைப் போல் உடம்பைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு வாழத் தயங்குகிறேன் நான். குயில் முட்டை சிதைந்து குஞ்சு பெரிதாக வளர்ந்து இனிய குரலில் அமுதொழுகக் கூவியவாறே காக்கைக் கூட்டிலிருந்து அது பறக்கும்போதுதான் காக்கை தான் வளர்த்தது தன் குஞ்சன்று, குயிற் குஞ்சு என்று உணர்ந்து ஏமாற முடிகிறது. எனக்கும் பூரணிக்கும் எங்களைப் புரிந்து கொள்ளாமல் இப்போதே அந்த ஏற்பாட்டையெல்லாம் நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டு செய்தால் நாங்கள் வாழ்வதும் காக்கை, குயில் முட்டையை அண்டகாத்த கதையாக ஏமாற்றத்தில்தான் முடியுமென்று எனக்குத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/340&oldid=556063" இலிருந்து மீள்விக்கப்பட்டது