பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 341

சேர்த்து நடத்தும் தீர்மானம் முறிந்து விட்டது. அன்று இரவும், அதன்பின் மறுநாள் காலையிலும் பூரணி, அரவிந்தனின் கண் பார்வையில் படவே இல்லை. மறுநாள் காலை கோடைக்கானல் மலைத் தொடர் முழுவதும் ஒர் அற்புதம் நிகழ்ந்தது. நீலம் போர்த்த மாதிரி மலை முழுவதும் குறிஞ்சிப் பூக்கள் தெரிந்தன. பத்துப் பன்னிரண்டு நாட்களாகவே அங்கும் இங்குமாகச் சில சில குறிஞ்சிப் பூக்கள் தென்பட்டன. முதல் நாள் உண்டான சாரல் காற்று பருவ மாறுதல்களின் காரணமாக அன்று எங்கு நோக்கினும் அள்ளிக் கொட்டினாற் போல் குறிஞ்சி பூத்துக் குலவிக் கொண் டிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த ஆண்டு மறுபடியும் குறிஞ்சி பூத்திருந்ததனால் ஊரில் ஒருகோலாகலப் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. எங்கும் அந்த அழகைப் பற்றியே பேச்சு. ஊருக்குத் திருவிழாக்களை உண்டாக்கி விட்டிருந்தது குறிஞ்சிப் பூ.

அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சி சுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டுடியோக்காரர் எடுத்த படம் மிக நன்றாக இருந்தது. முருகானந்தம் அந்தப்படத்தை மிகவும் பாராட்டினான். அவர்கள் இருவரும் புகைப்பட நிலையத்திலிருந்து வீடு திரும்பும் போது பூரணியும் வசந்தாவும் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தனர். படங்களைக் கேட்டு வாங்கிப்பார்க்கும் ஆவலோடு பூரணி சிரித்துக்கொண்டே தன்னை எதிர்கொண்டு வரவேற்பாள் என்று அரவிந்தன் நினைத்திருந்தான். முதல் நாள் மாலையில் திருமண ஏற்பாட்டைத் தான் மறுத்து விட்டதனால் தன் பார்வையில் தென்பட விரும்பாமல் அவள் மெல்லிய ஊடல் கொண்டு பிணங்கியிருப்பதை அவன் புரிந்து கொண்டான். இந்தப் படங்களைப் பார்த்த பின் அவள் பிணக்கு தீர்ந்து விடுமென்று அவன் நினைத்திருந்தான். ஆனால் அவன் நினைத்து இருந்தபடி நிகழவில்லை. படங்களோடு அவன் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/343&oldid=556066" இலிருந்து மீள்விக்கப்பட்டது