பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 343

பற்றித் தப்பாகப் புரிந்து கொள்கிறாளே என்ற வருத்தம் அவன் மனத்தை வாட்டியது.

மாலையில் குறிஞ்சிப் பூ பூத்திருக்கிற மலைப் பகுதிகளை யெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதற்காக எல்லோரும் கிளம்பினார்கள்.

'எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை! நான் வரமாட்டேன்' என்று முரண்டு பிடிப்பது போல் மறுத்தாள் பூரணி.

"அப்படியானால் நானும் வரவில்லை எனக்கும் ஒன்றும் பிடிக்கவில்லை' என்று அரவிந்தனும் காரிலிருந்து கீழே இறங்கி விட்டான்.

'உங்கள் இரண்டு பேருக்கும் என்ன வந்துவிட்டது இன்றைக்கு. முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியவில்லையே?" என்று மங்களேசுவரி அம்மாள் கடிந்து கொண்டாள்.

அவர்கள் எவ்வளவோ மன்றாடிக் கெஞ்சிப்பார்த்தும் பூரணியும் அரவிந்தனும் வர மறுத்துவிட்டார்கள். கடைசியில் அவர்கள் இருவரையும் வீட்டில் தனிமையில் விட்டுப் புறப்பட்டது கார். - -

வீட்டின் முன்புறத்தில் அருகருகே நாற்காலியில் பேசிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் அரவிந்தனும், பூரணியும். சமையற்கார அம்மாள் பின்புறம் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள். தோட்டத்து மல்லிகைச் செடியில் பூக்களைப் பறிக்காமல் விட்டிருந்ததனால் காற்று சுகந்தக் கொள்ளையைச் சுமந்து வீசிற்று. பச்சை நிறத்துக் காகிதத் துணுக்குகளை வானில் சிதறின மாதிரிப் பத்துப் பன்னிரண்டு கிளிகள் சேர்ந்தாற்போல் பறந்தன. அழகான சூழ்நிலை நிலவியது. எதிரெதிரே விரோதிகள்போல் பேசாமல் எவ்வளவு நேரம் வீற்றிருப்பது? கோபித்துக் கொள்வதுபோல் போலியாக உண்டாக்கிக் கொண்ட கடுமைக்குரலில் பூரணிதான் முதலில் கேட்டாள்.

'நான் வரவில்லையானால் உங்களுக்கு என்னவாம்? நீங்கள் பாட்டிற்குப் போக வேண்டியதுதானே?" -

'போகலாம். ஆனால் நான் ஆவலோடு பார்க்க விரும்பும் குறிஞ்சிப் பூ எதுவோ அது அந்த மலைகளில் பூத்திருக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/345&oldid=556068" இலிருந்து மீள்விக்கப்பட்டது