பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 குறிஞ்சி மலர் கொண்டிருக்கிறோம் நாம். பழமையிலும் சரி புதுமையிலும் சரி ஏனென்றும் எதற்கென்றும் காரணம் புரியாத சடங்குகளைத் துணிந்து கைவிடும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அடிப்படைக் கல்நாட்ட ஒருவர், திறந்து வைப்பதற்கு ஒருவர், கல் நாட்டுபவர் காரையை அள்ளிப் பூச ஒரு வெள்ளிக்கரண்டி, மாலை, எலுமிச்சம் பழம், ஒலி பெருக்கி என்று எத்தனை சடங்குகள்? இன்று இந்த நாட்டின் பொருளாதார வளத்துக்குச் சடங்குகள் தாம் பெரிய விரோதிகளாக இருக்கின்றன.'

'மிகவும் சரியாகக் கூறினாய், அரவிந்தன்? பள்ளிக் கூடத்துப் பையனின் பவுண்டன் பேனா இறுக்கி மூடிக் கொண்டால் அவன்கூடத் திறந்து வைக்க மந்திரியைக் கொண்டு வா என்பான் போலிருக்கிறதே! ஐயா கொத்தனாரே! இந்தக் குடிசைகளை இத்தனை செம்மையாக உழைத்து நன்றாகப் போட்டுக் கொடுத்தவர் நீர்தான். நாணயமாகவும் நம்பிக்கையாகவும் உழைக்கிற உழைப்பாளியைத் தான் கெளரவப்படுத்த வேண்டும்; பெருமை செய்ய வேண்டும். இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க நமக்குப் பிரமுகர்கள் தேவை இல்லை. மந்திரிகள் தேவை இல்லை. காரில் அழுக்குப் படாமல் வந்து இறங்கிப் பட்டும் படாததுமாகப் பட்டு ரிப்பனைக் கத்தரித்து விடும் சத்துச் செத்த மனிதர்கள் இந்தக் குடிசைகளைத் திறந்து வைக்க வேண்டாம் ஐயா! நீர் தான் இதைத் திறந்து வைக்கச் சரியான ஆள்' முருகானந்தம் இப்படிக் கூறியதும் 'என்னைக் கேலி செய்கிறீர்களா தம்பீ?" என்று நம்பிக்கையின்றித் தலையைச் சொறிந்து கொண்டே கேட்டார் கொத்தனார்.

'கேலியில்லை கொத்தனாரே, நாளைக் காலையில் நீங்கள் தான் இந்தக் குடிசைகளைத் திறந்துவைக்கப் போகிறீர்கள்' என்றான் அரவிந்தன். அதிசயமானதாகவும், புதுமையானதாகவும் ஆடம்பரமின்றி மறுநாள் அந்தத் திறப்பு விழா நடந்தது. குடிசைக்குள் நுழைகிற பொதுவான வழியில் ஒரு சிறு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார் கொத்தனார். ஒலி பெருக்கி இல்லை, மாலை இல்லை. சோடா இல்லை. பத்திரிக்கை நிருபர்கள் வரவில்லை. பிரபலமானவர்களும் வரவில்லை. விழாவுக்கு வந்திருந்த கூட்டம் அந்தக் குடிசைகளில் குடி யேறுவதற்குக் காத்துக்கொண்டிருந்த ஏழைக் கூட்டம் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/348&oldid=556071" இலிருந்து மீள்விக்கப்பட்டது